சென்னை சேர்ந்த பிரியா அகர்வால் என்ற கல்லூரி மாணவி சவுகார்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களை சந்திப்பதற்கு வடபழனி சென்றுள்ளார். அங்கிருந்து செல்போன் செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் ரத்து செய்யப்பதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து பிரியாணிக்கான தொகையான 76 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு, விவரங்களை கூறியுள்ளார். அதில் பேசிய நபர், ரூ.76 சிறிய தொகையாக இருப்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையில் திருப்பிச்செலுத்த முடியாது என தெரிவித்து. நீங்கள் ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள், மொத்தமாக ரூ.5 ஆயிரத்து 76ஆக திருப்பி செலுத்திவிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி அந்த மாணவி ரூ.5 ஆயிரத்தை வாடிக்கையாளர் சேவை அதிகாரி சொன்ன வங்கிக் கணக்குக்கு ஆன்லைனில் அனுப்பியுள்ளார். சிறிதுநேரத்தில் சேவை மையத்தில் இருந்து மாணவி பிரியாவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தற்போது நீங்கள் அனுப்பியதாக சொன்ன தொகை எங்களுக்கு வரவில்லை, மீண்டும் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். அதனையும் நம்பி அனுப்பியுள்ளார் மாணவி பிரியா.
அந்தத் தொகையும் வரவில்லை என மீண்டும் பரிவர்த்தனை செய்யுங்கள் என சேவை மையத்தில் இருந்து பேசியுள்ளனர். மீண்டும் மீண்டும் இதே போன்று 8 முறை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மொத்தத் தொகை ரூ.40 ஆயிரம். அவர் அனுப்பிய தொகை எதுவும் வங்கி கணக்கில் திரும்ப வராததை உணர்ந்த மாணவி தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மோசடி என்பதால் இந்தப் புகாரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கும்படி அவரிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அதன்படி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரியா புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிரியா பணம் செலுத்திய வங்கிக் கணக்கு, வாடிக்கையாளர் சேவை பிரிவு செல்போன் எண் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம் தெரியவந்த பின்பு, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வோர் அச்சத்தில் உள்ளனர். மேலும் தங்கள் பணத்தின் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்கவேண்டும் எனவும் எண்ணத் தொடங்கியுள்ளனர்.