மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என கூறச்சொல்லி ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்தில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பம் நடைபெற்று 48 மணிநேரம் கூட ஆகாத நிலையில், இஸ்லாமிய மதபோதகர் மீது தாக்குதல் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீஸ் முகமது சஹ்ருக் ஹல்தார் (26) என்ற இஸ்லாமிய மதபோதகர், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே ரயிலில் பயணம் செய்த இந்துத்துவா கும்பல் ஒன்று “ஜெய் ஸ்ரீராம்” முழக்கங்களை எழுப்பி வந்துள்ளனர். அந்த பெட்டியில் இருக்கும் சகபயணிகளுக்கு சொந்தரவு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டு வந்துள்ளனர். மேலும் ரயில் நிலையங்களில் ரயில் எறி இறங்குபவர்களுக்கு தொல்லைத் தரும் விதத்தில் நடந்துகொண்டதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.
அந்த சமயத்தில் முகமது சஹ்ருக்கிடம் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கம் எழுப்பும் படி அந்த கும்பல் வற்புறுத்தியதாகவும், மறுத்ததால் தன்னை தாக்கி, ரயிலை விட்டு வெளியே தள்ளியதாகவும், காவல் துறையில் புகார் அளித்துள்ளார் முகமது சஹ்ருக்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவருக்கு சிறு காயங்கள் இருந்தன, சித்தரஞ்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.” என அவர் தெரிவித்தார்.