மக்களவைத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதி நடைபெறுகிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா உடனிருந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் மோடி ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பா.ஜ.க தலைவர் அமித்ஷா பதிலளிப்பார் என்று மோடி கூறிவிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அமித்ஷா “ எல்லா கேள்விகளுக்கும் பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்” என்று தெரிவித்தார். தன்னுடைய கேள்வி மோடிக்கானது என்று செய்தியாளர் கூறிய பிறகும் அமித்ஷாவே பதிலளித்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி அவரது டிவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; “சிறப்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம், மோடிக்கு எனது வாழ்த்துக்கள், முகத்தை காட்டுவதே பாதிப் வெற்றி. அடுத்த முறை அமித் ஷா ஓரிரு அடுத்த முறையாவது அமித்ஷா 2 கேள்விகளுக்காவது பதிலளிக்க அனுமதிப்பார்” என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.