ஈஸ்டர் நாளான ஏப்.21 அன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் நீடித்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. மேலும், தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதையடுத்தும் நாட்டு மக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நாட்டில் சில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த டெட்டேனட்டர்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து பாதுகாப்பு படையினர் செயலிழக்கச் செய்தனர். இதனையடுத்து இலங்கை பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கையில் வர்த்தகத் துறை அமைச்சர் பதியூதனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தாக்குதல் குறித்து 60 பேரை புலனாய்வு அமைப்பு கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.