இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிறுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் 10 இந்தியர்கள் உட்பட 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக இலங்கையில் அவசர நிலையை அறிவித்து அதனை அமல்படுத்தினார் அதிபர் மைத்ரிபால சிறிசேன.
இதனையொட்டி, நேற்று அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டம் கூடியது. இதில் நியுஸிலாந்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக தான் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் வந்த தகவலின் படி, ஐ.எஸ். அமைப்பு இலங்கை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. மேலும், நியூஸிலாந்து சம்பவத்துக்கும் இதுக்கும் தொடர்பில்லை என்பது அந்த அமைப்பின் ஊடகமான அமக் மூலம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 9.40 மணிக்கு மேல், கொழும்பு நகரத்தின் புகோடா என்ற பகுதியில் உள்ள நீதிமன்றம் அருகே சிறிய குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் போலீசார் தரப்பில் தெரிவிக்கவில்லை