ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டன.
இந்தக் கோர சம்பவத்தில் 10 இந்தியர்கள் உட்பட 321 பேர் இதுவரை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து அடுத்தடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதால் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்து நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அமாக் வெளியிட்ட செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாடாளுமன்றக் கூட்டத்தில் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தனே பேசியபோது, “நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பழிவாங்கும் செயலாகவே இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது” என்ற முதல்கட்ட விசாரணை குறித்து தெரிவித்தார்.
பதிலடி கொடுப்பதற்காக இலங்கையில் குண்டுவெடிப்பு நடத்தவில்லை என ஐ.எஸ். அமைப்பு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.