சென்னை, சூளைமேடு ஜெய் கோபால் கரோடியா அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான 'மகிழ் முற்றம்' என்னும் கையேட்டின் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு கையேட்டினை வெளியிட்டார்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஸ், " எல்லாருக்கும் எல்லாமும் என்று பெரியார் பிறந்த நாளையும், அண்ணா பிறந்த நாளை மட்டும் சமூக நீதி நாளாக கொண்டாடாமல் வருடம் முழுவதையும் சமூக நீதி நாளாக கடைபிடிப்பவர் முதலமைச்சர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்த House system இனிமேல் அரசு பள்ளியிலும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் குழுவாக செயல்படும் உணர்வு மாணவர்கள் மத்தியில் மேம்படும். அரசு பள்ளியில் மாதிரி சட்டமன்றங்கள்,மாதிரி நாடாளுமன்றங்கள் மாணவர்களை வைத்து நடத்தப்படும்.
மாணவர்களின் தலைமை பண்பை மேம்படுத்த இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்பார்வையிடும் பணியை ஆசிரியர்கள் செய்வார்கள். மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும்,இந்த திட்டம் கிராமப்புற மாணவர்கள் இடையே உளவியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உலக குழந்தைகள் தினத்தன்று அரசு பள்ளிகளில் House system தொடங்கியதில் மகிழ்ச்சி, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இத்திட்டத்தை அமைத்துள்ளோம். மாதிரி சட்ட மன்றம், மாதிரி நாடாளுமன்றம் அமைத்து பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளை மாணவர்களே தீர்க்கும் வகையிலும் அவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்த வகையிலும் இத்திட்டம் பயன் தரும் " என்று கூறினார்.