நைக், அடிடாஸ், பூமா, நீயூ பேலன்ஸ், ரீபொக் போன்ற பல தோல் அல்லாத காலணி பிராண்டுகளின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு விளங்குகிறது.
தைவான், வியட்நாம், சீனா மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் இருந்து 19 ஏற்றுமதி நிறுவனங்களை வரவழைக்க கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.4,000 கோடி முதலீடு மற்றும் 50,000பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒரு பங்காக, தைவானிய நிறுவனமான டீன் ஷூஸ் (லாங் யின் முதலீடு) அரியலூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய உற்பத்தி பிரிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ரூ. 1,000 கோடி முதலீட்டில் அரியலூர் மாவட்டத்தில் 50,000பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய காலணி உற்பத்தியாளர், Pou Chen கார்ப்பரேஷன் மற்றும் மற்றொரு பெரிய நிறுவனமான ஹாங் ஃபூ இண்டஸ்ட்ரியல் குரூப் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
Zucca, Sports Gear மற்றும் Oasis Footwear ஆகியவையும் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது .
உலக காலணி இயர்புக் 2023 தரவுகளின்படி இந்தியா 10.9 விழுக்காடு உற்பத்தியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், அதன் உற்பத்தியில் 11 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் கவர்ச்சிகரமான காலணி கொள்கையே உலக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் அதிகரித்து வருகிறதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இந்தியாவின் முழு காலணி உற்பத்தித் துறையில் 32 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி தமிழ்நாட்டில் செய்யப்பட்டு வருகிறது.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் அறிக்கையின்படி, 26 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய காலணி சந்தை 2030ல் 90 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது
உலகளாவிய பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் குவிந்து வருவதால், தோல் அல்லாத பிரிவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகப் பெரிய பங்கு வகிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.