தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டுபோல பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் (யு.ஜி.சி.) பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் ‘போட்டி அரசு’ போல நடத்திக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியே முட்டுக்கட்டை போட்டுவருகிறார். யு.ஜி.சி. தலைவர் ஆளுநரை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பவேண்டுமே தவிர, தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் இதற்குப் பொறுப்பு அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
இந்தியாவிலேயே கல்வி, மருத்துவத் துறைகளில் ‘திராவிட மாடல்’ அரசாகிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தி.மு.க. அரசின் சாதனைகள், எடுத்துக்காட்டானவைகளாகத் திகழ்கின்றன.
இது கடந்த 50 ஆண்டுகால வரலாற்றின் பெரும் நீட்சியாகும். குறுக்கு வழியில் முட்டுக்கட்டை போடுகிறார்கள் குறிப்பாக இவ்வாட்சியில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும், தொழில் கல்வியும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வளரும் நிலையைக் கண்டு, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு நாளும் நாட்டிலும், உலகின் பிற நாடுகளிலும் வரும் புகழை ஜீரணிக்க முடியாத திராவிட எதிரிகளும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களும் இதனைத் தடுக்கவும், சமூகநீதிக் கொடி பெரியார் மண்ணில் தலைதாழாமல் பறந்து கொண்டிருப்பதாலும் - எரிச்சல் அடைந்து, அதைத் தடுக்கும் பணியை தங்களுக்குள்ள சிற்சில அதிகாரங்களைக் கொண்டு – குறுக்கு வழியில் முட்டுக்கட்டை போடுகிறார்கள். தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் அதிவேக வளர்ச்சிகளால் ஏராளமான பல்கலைக் கழகங்கள் இங்கே உருவாகியுள்ளன!
பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவரின் பேட்டி!
அதில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களே பல ஆண்டுகளாக இல்லாது, ‘தலையில்லா உடல்மட்டும் இயங்கும்’ கேலிக்கூத்தாக தமிழ்நாட்டின் பிரபல பல்கலைக் கழகங்கள், சென்னை பல்கலைக் கழகம் முதல் சுமார் 7, 8 பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. இதனை யு.ஜி.சி. தலைவர் (பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர்) தமிழ்நாடு அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக இன்று (15.11.2024) ஒரு செய்தி வெளிவந்துள்ளது குறித்து வேதனையும், வெட்கமும் அடையவேண்டியுள்ளது.
இதற்கு யார் காரணம்? எதிர்க்கட்சித் தலைவர் போல செயல்படும் தமிழ்நாடு ஆளுநர்!
தமிழ்நாடு அரசா? அல்லது ‘ex-officio’ வேந்தர் – Chanceller என்ற ஓர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநிலக் கல்வித் துறையில் தேவையில்லாமல் தலையிட்டு, இதுபோன்ற ‘தலையில்லாப் பல்கலைக் கழகங்களில் வேந்தர்’ என்பதில் பெருமை கொள்ளுபவர் – பதவிக் காலம் முடிந்தும் மறு அறிவிப்புவரை ஆளுநராக உள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவார்!
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் போலவேதான் அவரது அன்றாட அரசியல் நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் இருக்கின்றன; ஒரு போட்டி அரசினை நடத்துவதாகவே மக்களுக்கும் நன்கு புரிகிறது. அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவே அவர் இப்படி நடந்துவருகிறார்.
தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்த வரைவை கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர்
சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது – உயர்கல்வித் துறையில். மாநில அரசின் பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக மாற்றம் செய்த அச்சட்டத் திருத்த வரைவை திருப்பி அனுப்பாமலேயே அவர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதே இதற்கு மூலகாரணம் ஆகும்!
பல முக்கிய பல்கலைக் கழகங்களில் படித்து, பட்டதாரி, மேல்பட்டதாரி தேர்வில் வெற்றி பெற்று பல ஆண்டுகளாகியும் நியமனங்கள் பெற முடியாதபடி, அந்த பட்டங்கள் (Degree) பட்டமளிப்பு விழா தேதியைத் தராத காலதாமதம்பற்றி பல விமர்சனங்கள் எழுந்த பின்னரே, துணைவேந்தர்களே இல்லாத – ‘வேந்தரே சர்வமும்’ என்ற கேலிக்கூத்தோடு அவை நடைபெறுகின்றன!
இதுபற்றி தமிழ்நாடு அரசும், கல்வி ஆர்வலர்களும், பெற்றோரும் – ஆளுநர் போக்கு, உயர்கல்விக்கு அவரால் ஏற்படும் பாதகங்கள் – வளர்ச்சித் தடைகள்பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் போட்டு, நீதி கேட்கவேண்டும்!
இதற்குத் தமிழ்நாடு அரசு மட்டுமா பொறுப்பு?
வேந்தர் ரவியிடம் அல்லவா கேள்வி எழுப்பவேண்டும்?. இந்த நிலை நீடிப்பதை எவ்வளவு காலத்திற்குப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?. தமிழ்நாட்டின் ஆளும் கட்சிக்கு மட்டும்தான் பொறுப்பா? மாநில கல்வி உரிமையை நாளும் பறிக்கும் ஒன்றிய அரசின் முகவர்கள் போடும் முட்டுக்கட்டைகளை அகற்றி– கல்வி நீரோடை தங்கு தடையின்றிப் பாய உடனே ஏற்பாடு செய்யவேண்டும்.