சென்னை, ஐ.ஐ.டி.எம். ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "STARTUP CHENNAI - செய்க புதுமை" திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் வழங்கும் பெரியார் சமூகநீதி தொழில் வளர் மையம், தொழில் நயம் வடிவமைப்பு மையம், startify தொழில் முனைவு போட்டிக்கான இணையதளம் ஆகியவற்றையும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடங்கிவைத்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் விழாவில் சிறப்புரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்றும் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. 1970ஆம் ஆண்டிலேயே சிட்கோ என்னும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தை கலைஞர் உருவாக்கினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், தொழில்துறையில் பல புதுமையான முற்போக்கான முயற்சிகளை திராவிட மாடல் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடுமுழுவதும் பரவலான தொழில் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசியன் லட்சியம்.
சிறிய நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில்தான் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டம் தொடங்கப்பட்டது. முதலமைச்சரின் இலக்கான, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கு, பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம்.
தொழில் முனைவோர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க நிதி உதவி அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.