ஆண்டுதோறும் நவ.14-ம் தேதி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. நேருவுக்கு குழந்தைகள் பிடிக்கும் என்பதால், அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நேருவின் இந்த ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி அறிவிக்கப்ட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டி 12.11.2024 அன்று பள்ளி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியிலும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேனிலைப்பள்ளியிலும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியிலும் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
13.11.2024 அன்று கல்லூரி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், தென்சென்னை அளவில் இராணி மேரி கல்லூரியிலும் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் இரு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு :
1. அமைதிப் புறா நேரு
2. நவீன இந்தியாவின் சிற்பி
3. ஆசிய ஜோதி.
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு :
1. நேருவின் வெளியுறவுக் கொள்கை
2. நேரு கட்டமைத்த இந்தியா
3. நேருவின் பஞ்சசீலக் கொள்கை.