சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கத்தில், சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் இந்தியர்களுக்கான சேலஞ்சர்ஸ் பிரிவின் 2 வது சுற்று போட்டிகளை பொறுத்தவரை, தமிழ்நாடு வீரர்கள் பிரனேஷ், கார்த்திகேயன் முரளி இடையேயான போட்டி மற்றும் தமிழ்நாட்டின் வைஷாலி மற்றும் இந்திய வீரர் ரௌனக் சத்வானி இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
அதே சமயம் இந்தியாவின் அபிமன்யு புரானிக்-ஐ, தமிழ்நாடு வீரர் பிரணவ் கருப்பு காய்களுடன் ஆடி, தனது 49 வது நகர்வில் வீழ்த்தினார். அதே போல மற்றொரு போட்டியில், ஹரிகா துரோணவள்ளி, லியோன் லுகே மெண்டான்கா உடனான போட்டியில் தோல்வியை தழுவினார்.
லியோன் லுகே மெண்டான்கா வெள்ளை காய்களுடன் விளையாடி 44 வது நகர்வில் ஹரிகாவை வீழ்த்தினார். எனவே, சேலஞ்சர்ஸ் 2 வது சுற்றின் முடிவில், தமிழ்நாடு வீரர் பிரணவ் 2.0 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், லியோன் லுகே மெண்டான்கா 2.0 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், ரௌனக் சத்வானி 1.5 புள்ளிகள் உடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக உள்ள வைஷாலி ரமேஷ் பாபு 0.5 புள்ளிகள் உடன் 5 வது இடத்திலும், ஹரிகா துரோணவள்ளி 2 சுற்றுகளிலும் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாமல் 0 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் தொடர்கிறார்.