வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கும் நிலையில், கடந்த 14-ம் தேதி அன்று சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழை அடுத்த நாள் மாலை வரை விட்டு விட்டு பெய்தது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கினால் மழை விட்டதுமே தமிழ்நாடு அரசின் வடிகால் சிறப்பாக செயல்பட்டதால் வெள்ளநீர் உடனடியாக வழிந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவிவுறுத்தல் படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெள்ளப்பாதிப்பில் இருந்து சென்னையை மீட்டனர்.
எனினும் சில இடங்களில் மட்டும் மழைநீர் வடிய சிறிது காலதாமதம் ஆனது. இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி, பள்ளிக்காரணை, வள்ளூவர்கோட்டம் சாலை, அரும்பாக்கம், பெரம்பூர், பட்டாளம், வட பெரும்பாக்கம் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிவதில் சிக்கல் இருந்த நிலையில், அந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தண்ணீர் தேங்கிய இடங்களில் மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல், கூடுதல் மோட்டார்களை அமைப்பது குறித்து கவனம் செலுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வேளச்சேரி வீராங்கல் ஓடையை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.