தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் சார்பில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களைத் தொடங்கக் கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எம்.பி, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கும் கடிதங்கள் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,” சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்தகுமார் சூசை மாணிக்கம், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் சார்பில் முதுநிலை ஆராய்ச்சி கல்லூரிகளை துவங்க வேண்டும் என்று கோரி என்னிடம் ஒரு மனுவினை கொடுத்துள்ளார். அம் மனுவில் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அய்.அய்.டி தேசிய கணக்கியல் கல்வி நிறுவனம் என்.அய்.டி மத்திய பல்கலைக்கழகம் முதலானவை அமைக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி கேரளத்தில் விண்வெளி ஆராய்ச்சி கல்வி நிறுவனம் மேலாண்மைக் கல்வி நிறுவனம் என பல்வேறு மத்திய கல்வி நிறுவனங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும் நிலையை துவங்கியுள்ளது. அங்கு இந்திய மாணவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய செயற்கைக் கோள் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் ஒன்றைத் துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதன் மூலம் மாணவர்களுக்கு செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி முதலானவற்றில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 1,50,000 மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்காக பொறியியல் கல்லூரிகளில் சேர்கின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப இயக்குநகரத்திற்கு சுமார் 1,42,867 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனவே குலசேகரப்பட்டினத்தில் ஒன்றிய அரசு விண்வெளி ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தை உருவாக்கினால் மிக அதிக அளவில் மாணவர்கள் இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
அதேபோன்று தமிழகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் அதாவது அய்.அய்.எம் கல்லூரியையும் துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இதன் மூலம் தமிழகத்தில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உருவாகி மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.