ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமலும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமலும் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கண்டனம் எனும் தலைப்பில் அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைச்சர் மதிவேந்தன் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
கடந்த ஆட்சி காலத்தில் தாட்கோ மூலம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் பல்வேறு இதர நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கி இருந்தது. மேலும், தாட்கோ மூலம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்க பெறபட்ட 3,963 விண்ணப்பங்கள் இருப்பில் வைக்கப்பட்டு, இம்மானியத்திற்கான தொகை ரூபாய் 52.01 கோடி விடுவிக்கப்படாமல் வங்கிகளில் நிலுவையில் இருந்தது.
இந்நிலையை உடனடியாக சரிசெய்வதற்கு, மாவட்ட அளவில் மேலாளர்கள், உதவி மேலாளர்கள், திட்ட மேலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்புவது மிகவும் அவசியமாகும்.
தாட்கோவில் பெரும்பாலான மேலாளர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. நிர்வாக நலன் கருதி தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மற்றும் கடனுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலனை செய்து வங்கிகளில் உள்ள நிதியினை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக 11 மாவட்ட மேலாளர்கள், 6 உதவி மேலாளர்கள் - போன்ற பணியிடங்கள் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பியதின் மூலம் கடந்த ஆட்சி காலத்தில் வங்கியில் இருந்து விடுக்கப்படாத மானியத்தொகையுடன் இன்றைய தேதிவரை உள்ள ரூபாய் 100 கோடிக்கான மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வருடத்திற்கான கடனுதவி விண்ணப்பங்களும் பெறப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தாட்கோ தொழில்நுட்ப பிரிவில் 2 செயற்பொறியாளர் பணியிடம், 18 உதவி செயற்பொறியாளர் பணியிடம் மற்றும் 80 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றினை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்திற்கு கடிதம்
அனுப்பப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும். தாட்கோ மூலம் சுமார் 600 கோடி மதிப்பீட்டிலான பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் "அமுத சுரபி” எனும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு, முன்னோடித் திட்டமாக சென்னை மாநகரில் உள்ள விடுதிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, பொது சமையலறையிலிருந்து அருகில் உள்ள விடுதிகளுக்கு காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேலைகளிலும் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் நிறைவான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விதிகளின்படி தேர்வுசெய்யப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு இப்பணி வழங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
விடுதி மாணவர்களிடையே இத்திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இத்திட்டத்தினால் விடுதியில் உள்ள சமையலர் எவருக்கும் பாதிப்பு இல்லாமல், அவர்கள் அவ்விடுதியின் இரவுநேர காப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேலாகவே விடுதி காப்பாளர்களாக பணியாற்றும் காப்பாளர்களை அரசு விதிகளின்படி மாற்றம் செய்வதற்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் Bio Metric, CCTV மற்றும் TEXCO பாதுகாவலர்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வெளியாட்கள் யாரும் முறைகேடாக தங்குவதற்கு வாய்ப்பில்லை.
தென்காசி மாவட்டத்தில் வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதி திராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு ரூபாய் 5.10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நிறைவுற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, உண்மைக்கு புறம்பான செய்தியை எதிர்கட்சி தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
ஒன்றிய அரசால் வழங்கப்படும் நிதியானது இத்துறையால் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2023-2024ம் ஆண்டில் PMAGY திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூபாய் 186 கோடியும் SCA-Grants in aid திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூபாய் 61 கோடியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எதிர்கட்சி தலைவரின் அறிக்கை தவறான செய்தியாகும்.
பழங்குடியினர் மேம்பாட்டு வசதிக்காக "தொல்குடி" என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கான அரசு ஆணைகள் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது முற்றிலும் தவறான செய்தியை எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி அடிப்படையிலான சமத்துவ சமுதாயத்தினை உருவாக்க உறுதி பூண்டுள்ள முதலமைச்சர் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் இயங்கி வரும் இவ்வரசு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை அனைத்து நிலைகளிலும் உயர்வடையச் செய்வதற்கான பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.