வடகிழக்கு பருவமழை விரைவாக தொடங்க இருப்பதால், 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரவமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் மடுவு, அடையாறு போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முதலாவதாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியான செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியில் கோவளம் அறு - நீல கொடி கடற்கரை பகுதியில் பக்கிங்காம் கால்வாய்யின் முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து சோழிங்கநல்லூர் அக்கறை பகுதியில் உள்ள கலைஞர் சாலை மேம்பாலத்தின் கீழ் செல்லும் பக்கிங்காம் கால்வாய்யின் ஒருபுறத்தில் ஆகாயத்தாமரை முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது அதனை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்,மறுபுறத்தில் நடைபெறும் ஆகாயத்தாமரை, மணற்திட்டுகளை விரைவாக அகற்றி ஓரிரு நாட்களில் மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் துரைப்பாக்கம் - ஒக்கியம் மடுவு நீர்நிலையில் நடைபெற்ற ஆகாயத்தாமரை , மணற்திட்டுகள் அகற்றி கரைகள் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது அதனை ஆய்வு செய்து, பணிகளை துரிதமாக நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் சென்னை பெசன்ட் நகர் அடையார் முகத்துவாரம் நிரந்தரமாக திறந்திருக்கும் வகையில் மணல் திட்டுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதனை ஆய்வு செய்து விரைவாக மணல் திட்டுகளை அகற்றி மழை நீர் விரைவாக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
முட்டுக்காடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, ”வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது, சென்னை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
மழைநீர் கடலில் கலக்கும் வண்ணம் பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ள முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை தற்பொழுது ஆய்வு செய்துள்ளோம், மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நீர்வளத் துறையின் சார்பில் 39 கோடி மதிப்பீட்டில் 180 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன, கடந்த மூன்று மாதங்களாக 200க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் துறை, நிதித்துறை மின்சாரத்துறை மற்றும் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மூன்று ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது, மேலும் அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான ஆய்வு கூட்டமும் நடைபெற்றது.
சென்னை பக்கிங் காம் கால்வாய், ஓட்டேரி நல்லான், விருகம்பாக்கம் அரும்பாக்கம் கால்வாய், ஒக்கியம் மடுவு ஆகிய பெரிய நீர் நிலைகளில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்திருக்கிறது, ஏரியை பொருத்தவரை அம்பத்தூர் ஏரி, போரூர் ஏரி, நாராயணபுரம் ஏரி, கீழ்கட்டளை ஏரி போன்றவற்றில் தண்ணீர் செல்லும் நீர் வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற பணிகளில் 1500 லோடு ஆகாயத்தாமரைகள், குப்பைகள், மணல் திட்டுகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன, குறிப்பாக கொசுத்தலை ஆறு, கூவமாறு, அடையாறு, ஆயவற்றின் முகத்துவாரங்கள் நிரந்தரமாக திறந்திருக்கும் வண்ணம் 232 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முட்டுக்காட்டு பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் செல்லும் முகத்துவாரத்தை சீரமைக்கும் பணி முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகள் மழைக்காலத்திலும் இடைவிடாது நடைபெறும், மக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர் ஆய்வு செய்து வருகிறோம். சென்னையின் மழைநீர் வடிகாலுக்கான முக்கிய நீர் வழித்தடமாக இருக்கின்ற அடையாறு ஆற்றின் முகத்துவாரம் அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் இன்று ஆய்வு செய்தோம். நீர்வளத்துறைச் சார்பில் ஆகாயத்தாமரையை அகற்றுதல், மணற்திட்டுகளை நிரந்தரமாக அப்புறப்படுத்துதல் என அடையாறு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைக் கேட்டறிந்தோம். பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம் - பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்வோம்.
மழைக்காலத்தில் தண்ணீர் எங்கும் தேங்காமல் இருப்பதை உறுதி செய்கிற விதமாகச் சென்னை பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கின்ற முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆய்வு செய்த பிறகு, தண்ணீர் வந்து சேருகின்ற சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் பகுதிகளில் பக்கிங்காம் கால்வாயின் நீர் வழிப்பாதைகளைப் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினோம். மழை நீர் எளிதாக வடிந்து செல்ல ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தொடர்ச்சியாக, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் நீர் வழிப்பாதைகளை ஓரிரு நாட்களில் விரைந்து தூர்வாரிட வலியுறுத்தினோம்.
சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க கழக அரசு இரவு – பகலாக தூர்வாருதல் உள்ளிட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை இன்று மாலை ஆய்வு செய்தோம். சென்னையைப் பொறுத்தவரை, கொசஸ்தலை ஆறு, அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் வழியாக மழை நீர் கடலில் கலந்திட ஏதுவாக, நீர்வளத்துறை சார்பில் நீர்வழித்தடங்களைத் தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகள் – அலுவலர்களிடம் கேட்டறிந்தோம். இதற்காக 200-க்கும் அதிகமான எந்திரங்கள் – ஆயிரக்கணக்கான பணியாட்கள் என 80 நாட்களுக்காக மேலாக நடைபெற்று வரும் இப்பணிகள் தொடர ஆலோசனைகளை வழங்கினோம்.” எனத் தெரிவித்துள்ளார்.