தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியைப் பிடித்த 3 ஆண்டுகளில் சமூக நீதியை நிலைநாட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் தான், தமிழ்நாட்டின் வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் நடவடிக்கையும் அமைந்துள்ளது. ஜூலை 2024 வரையிலான கணக்குப்படி, சுமார் 6.5 இலட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
அதன் தொடர்ச்சி, இன்றளவும் தொடர்ந்து வருகிறது. அதற்கு சான்றாக அண்மையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு 36 ஆயிரம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் சுமார் 1,200 வீட்டுமனைப்பட்டாக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இது குறித்து துணை முதலமைச்சர், தனது X வலைதளப் பக்கத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம் திராவிட_மாடல் அரசு மக்கள் நலனுக்கானத் திட்டங்களைத் தேடித்தேடிச் செயல்படுத்தி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கிட்டத்தட்ட 36 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில், 18 ஆயிரம் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 1200 பட்டாக்களை இன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினோம்.
வீட்டுமனைக்கானப் பட்டா என்பது அவரவர் சட்டப்பூர்வ உரிமை. அதை நம் திராவிட மாடல் அரசு நிலைநாட்டியுள்ளதை வரவேற்று மகிழ்ந்த திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்!” எனத் தெரிவித்துள்ளார்.