கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளிவந்து இருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தனது முதல் படத்திலேயே, விளையாட்டில் இருக்கும் பாகுபாட்டை அழுத்தமாக பேசி இருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
இந்நிலையில், ’லப்பர் பந்து’ படத்திற்கு வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இயக்குனர் காலத்துக்கு தேவையான கதைக்களத்தை தேர்வு செய்து இருக்கிறார். திறமை முன்னுதாரணம் இது.
கிராமபுற கிரிக்கெட்டில் சாதி முக்கிய கூறாக இருப்பதனை இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதெல்லாம் கசப்பான வெளிச்சத்திற்கு வராத உண்மைகள். கிராமம் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இது போன்ற பாகுபாடுகள் கொண்டு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சாதி மறுப்பு திருமணத்தின் முக்கியத்துவத்தை படத்தில் இயக்குனர் காட்டியுள்ளார். இது பாராட்டுக்குரிய ஒன்று.
ஆணாதிக்க போக்கையும் வெளிப்படுத்தி உள்ளது இந்த படம். ஆணாதிக்கத்தை நொறுக்கும் வசனம் உள்ளது. சாதி திமிர் கூடாது என்பதனை போல ஆணாதிக்க திமிரும் கூடாது என்பதனை காட்டியுள்ளார். சமூக நீதி, சமத்துவ சிந்தனையோடு இந்த படம் அமைத்துள்ளது. இது வணிக நோக்கில் எடுத்த படமல்ல. இந்த தலைமுறையினருக்கு சொல்லப்பட வேண்டிய அரசியல் பாடம்” என தெரிவித்துள்ளார்.