சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளைக் கொண்டு செல்லும் விதமாக புதிதாக 3 மின்சார வாகனங்களை மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், “500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . தொடங்கப்பட்ட ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுக்கு உள்ளாகவே புற நோயாளிகளின் எண்ணிக்கை 3,37,275 பயன் பெற்றுள்ளார்கள்.
3,881 அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதே போல் 11,99,108 இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 12,860 சிடி ஸ்கேன்களும், 4,330 எம்ஆர்ஐ , 3,020 எண்டோஸ்கோபியும்,10,929 டயாலிசிஸ் சிகிச்சைகளும் வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 1,300-லிருந்து 1,500 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுக்குள்ளாகவே வேறு எந்த அரசு மருத்துவமனைகளிலும் இந்தியாவிலே இல்லாத சாதனை இந்த மருத்துவமனை தொடர்ந்து செய்து வருகிறது.
இருதயவியல், இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, குடல் இரைப்பை, மார்பு புற்றுநோய் துறை, சிறுநீரக மருத்துவத்துறை, அவசர சிகிச்சை பிரிவு, பதினவீன அறுவை சிகிச்சை, இரத்த வங்கி, மத்திய ஆய்வகம், மூளை இரத்தநாள சிகிச்சை பிரிவு பல்வேறு புதிய நவீன வசதிகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் மருத்துவமனைக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கின்ற வகையில் ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட் லிமிடெட் தனது சிஎஸ்ஆர் பங்களிப்பின் மூலம் ரூபாய் 13 லட்சம் ரூபாய் செலவில் மூன்று பேட்டரி வாகனங்களை தந்திருக்கிறார்கள். அது இன்று இந்த மருத்துவமனை பயன்பாட்டிற்காக தரப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் ஒரு மகத்தான திட்டத்தை அறிவித்தார். அவை அரசு மருத்துவமனைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதி அரசர்கள், மத்திய அரசு ஊழியர்கள், ஒன்றிய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இந்த மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுகின்ற வகையில் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஹெல்த் ஸ்கீம் இணைக்கப்பட்டு புரிந்து கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டு அந்த புரிந்து தற்போது அரசு மருத்துவ நிர்வாகத்திற்கும் ஒன்றிய அரசின் நிர்வாகத்திற்கும் இந்த மருத்துவமனையின் மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளுகிற வகையில் இந்த திட்டம் உள்ளது.
இந்த மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுகிற அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அரசு மருத்துவ நிர்வாகத்துக்கும் ஒன்றிய அரசு நிர்வாகத்துக்குமாக இன்று பரிமாற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டம் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்றே தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பசுமை கட்டிடமாக வடிவமைக்கப்படும் என்கின்ற வகையில் பொதுப்பணித்துறைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சில் ஹெல்த் கேர் திட்டத்தில் தங்க சான்றிதழ் தந்திருக்கிறார்கள் தங்க சான்றிதழ் ஒன்றை மருத்துவ நிர்வாகத்திடம் அளித்திருக்கிறார்கள். தமிழ்நாடு மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசின் ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையிலும், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பயன்பெறுகின்ற வகையிலான ஒரு மகத்தான திட்டமும் இன்று முதல் இந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும்” என்றார்.