முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்னும் வைராக்கியத்துடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மகத்தான முறையில் பயனளித்து, தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்து வருகின்றன.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் :
மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட மலைப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, 8 கிராமங்களில் மக்களைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதுவரை அந்த மலைப்பகுதிக்கு எந்த ஒரு அமைச்சரும் அதிகாரியும் சென்று நேரடியாக மக்களைச் சந்தித்ததில்லை.
தொலைதூரக் கிராம மக்கள் மருத்துவர்களைத் தேடி வரவேண்டியதில்லை; அந்த மக்களைத் தேடி மருத்துவர்கள் சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், "மக்களைத் தேடி மருத்துவம்" என்னும் மகத்தான திட்டத்தை உருவாக்கி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளிக்கு 5.8.2021 அன்று நேரடியாகச் சென்று அத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அந்நாளில், அந்த மலை கிராமங்களில் இரண்டு கால்களையும் இழந்த ஒருவருக்குச் செயற்கைக் கால்களை வழங்கி, அங்கே ஒரு புதிய 108 ஆம்புலன்ஸ் வசதியையும் தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாகக் கடந்த மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் வாயிலாக 632 கோடியே 80 இலட்சம் ரூபாய்ச் செலவில் 1 கோடியே 85 இலட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள். இது, இத்திட்டத்தின் வெற்றிக்குக் கிடைத்துள்ள சான்றுகள் ஆகும்.
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48–திட்டம் :
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் உயிர்கள் பல பலியாகும் செய்தி பத்திரிகைகளில் வந்தவண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் இத்தகைய சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து உயிர்ப்பலி நேராமல் காப்பாற்றும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய திட்டம் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம். சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் சென்று இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின்கீழ் 237 அரசு மருத்துவமனைகள், 455 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 2.25 இலட்சம் பயனாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களின் இன்னுயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
சாலை விபத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்து உயிர்காக்கும் திருப்பணியில் ஈடுபட்டோரை ஊக்குவித்து, அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.5,000 ஊக்கப் பரிசு வழங்கி, அவருக்கு "நற்கருணை வீரன்" எனும் பட்டமும் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார்கள்.
தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்குத் துணைபுரிவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அவர்களின் நலன்களைப் பாதுகாத்திட வேண்டும் என்னும் சிந்தனைகளுடன் தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் என்கிற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். அத்திட்டத்தைத் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் 9.1.2024 அன்று தொடங்கிவைத்தார்கள்.இத்திட்டத்தின் மூலம் இதுவரை 711 தொழிற்சாலைகளில் 5,27,000 பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, 26,861 பணியாளர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமுன் காப்போம் திட்டம் :
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வருமுன் காப்போம் திட்டத்தை 2007 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பான திட்டமாகத் தமிழ்நாட்டில் முன்னெடுத்தார்கள். கடந்த ஆட்சியின் 10 ஆண்டு காலத்திலும் இத்திட்டம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த வருமுன் காப்போம் திட்டம் அளித்த பயன்களை மனதில் கொண்டு, "கலைஞரின் வருமுன் காப்போம்” என்கின்ற திட்டமாகப் பெயர் மாற்றி; மீண்டும் செயல்படுத்தி வருகிறார்கள்.
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 இடங்களிலும், மாநகராட்சிப் பகுதிகளில் 4 இடங்களிலும், சென்னையைப் பொறுத்த வரையில் 15 இடங்களிலும் என்று ஆண்டொன்றுக்கு 1,250 முகாம்ள் நடத்த வேண்டுமென்று திட்டமிட்டு; கடந்த 3 ஆண்டுகளில் 4,042 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன இதுவரை இத்திட்டத்தில் 36 இலட்சத்து 69 ஆயிரத்து 326 பேர் பயன்பெற்றுள்ளனர்.