தமிழ்நாடு

ரூ.27 கோடி லஞ்சம் : அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு!

ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரூ.27 கோடி லஞ்சம் : அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க ஆட்சியின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது, ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக அவர் இருந்து வருகிறார்.

சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சர் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் 57 புள்ளி 94 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்து 453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தது.

ஆனால், அந்தத் திட்டத்துக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காத நிலையில், 2016-ஆம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்க அப்போதைய அமைச்சரான வைத்திலிங்கத்துக்கு 27 கோடியே 90 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த பணம் அந்த குழுமத்துக்கு சொந்தமான 'பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட்' மூலம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குநர்களாக இருந்த 'முத்தம்மாள் எஸ்டேட் பிரைவெட் லிமிடெட்' என்ற நிறுவனத்துக்கு இத்தொகை கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டது.

தங்களுக்கு கிடைத்த லஞ்ச பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சி பாப்பாகுறிச்சியில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நாலரை ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இதேபோன்று, லஞ்ச பணம் கிடைத்த காலக்கட்டத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை அடுத்தடுத்து வாங்கியுள்ளனர். எனவே முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டில், உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவரது உறவினர் பன்னீர்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், பாரத் நிறுவனம் உள்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைவரிடமும் ஊழல் தடுப்புப் பிரிவினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

banner

Related Stories

Related Stories