இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவுசிலைக்கு வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், ”பெரியார் என்ற சொல் பா.ஜ.கவிற்கு பிடிக்காது. ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டேன் என்று வெளியேறியவர். அந்த அளவிற்கு பா.ஜ.கவினருக்கு பெரியார் மீது வெறுப்பு இருக்கிறது.
தி.மு.க கூட்டணியில் பிளவு என்று மூக்கு அறுபட்டவர்களின் கூச்சல் இது, புலம்பல் இது,பா.ஜ.க எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது. இப்போது தேர்தல் கணக்கு கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டார்கள். கூச்சல் எழுப்பினார்கள் எப்படியாவது கூட்டணியில் விரிசல் அடையாதா? பிளவு ஏற்படாதா? என்று காத்து கிடந்தார்கள். எதிர்பார்த்து இருந்தார்கள். தற்போது ஏமாந்து போனார்கள். வி.சி.கவும் தி.மு.கவும் ஒரே நேர்கோட்டில் கொள்கையளவில் பயணிக்கிறது" என தெரிவித்துள்ளார்.