இந்திய சமூக நீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் ஆகும். கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோவிலைச் சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 1924--ம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது கேரள தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி இந்தப் போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்தக் கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் தமிழ் நாட்டில் இருந்துகேரளாவுக்கு புறப்பட்டு வந்து, வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.
இந்தப் போராட்டம் அப்போது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தந்தை பெரியார் 2 முறை கைதானார். முதல் முறை ஒரு மாதமும், 2-ம் முறை 6 மாதமும் அவ- ருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் கை, கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர் சீரமப்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில் திருவாங்கூர் மகாராஜா இயற்கைஎய்தியதால், ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். அதுமட்டுமின்றி வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையையும் ராணி நீக்கினார். இதனால் பெரியாரின் போராட்டம் வெற்றியில் முடிந்து 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்.
இந்தப் போராட்ட வெற்றியின் 100-ம் ஆண்டைக் குறிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி வேப்பேரி பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒருசேர வந்தனர். அவர்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றார். அதன் பிறகு அங்கிருந்த பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு பெரியார் திடலில் உள்ள நினைவு தூண் அருகே விழா நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றன.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதனை தொடர்ந்து நூற்றாண்டு விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நூற்றாண்டு மலரை வெளியிட அதை பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார். அதே போல் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 'பெரியாரும் வைக்கம் போராட்டமும்' என்ற நூலை வெளியிட அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
கேரள மாநிலம், வைக்கம் கடற்கரைமைதானத்தில் கேரள அரசின் சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய மு.க. ஸ்டாலின் அவர்கள், ‘நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நானும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொண்டோம். அக்கூட்டத்தில் பேசிய நான் - வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்- டுகள் ஆகப் போகிறது. தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். எனக்குப் பிறகு பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதனை உறுதிப்படுத்தி பேசினார்கள்.
நாங்கள் நடத்துகிறோம் - நீங்கள் வருகை தாருங்கள் என்று எனக்கு அந்த மேடையில் வைத்தே அழைப்பு விடுத்தார்கள். உடலால் நாம் வேறு வேறு என்றாலும் உணர்வால் ஒருவர் என்பதை அந்த மேடையிலேயே பினராயி விஜயன் நிரூபித்- தார்கள். சில நாட்களில் வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள்.
மரியாதைக்குரிய சகோதரர் பினராய் விஜயன் அழைத்து நான் இதுவரை வராமல் இருந்தது இல்வை. தமிழ்நாட்டில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று நான் இங்கே வந்துள்ளேன். வைக்கம் என்பது இப்போது கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு எழுச்சியை, உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர் ஆகும் என்றார்.