தமிழ்நாடு

”மின் தடைக்கு காரணம் என்ன?” : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

சென்னையில் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

”மின் தடைக்கு காரணம் என்ன?” : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின் வாரியம் துரித நடவடிக்கையால் மின் விநியோகம் சீராகியுள்ளது.

இந்த நிலையில் மின் தடைக்கு காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12, 2024) இரவு சுமார் 09:58 மணி அளவில், மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

மின் தடை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.

மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories