ஃபோர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர்பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
ஃபோர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டு செயல்பட்டு வந்தது. இன்கு தயாரிக்கப்பட்ட கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்னை ஆட்டோமொபைல் துறையின் முன்னோடி இடமாக மாற ஃபோர்டு நிறுவனமும் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது.
ஆனால், கடந்த 2021ம் ஆண்டு முதல் அந்த நிறுவனம் சென்னை தொழிற்சாலைகளில் கார் தயாரிப்பை நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து சென்னையில் மூடப்பட்ட ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின்ஆலையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் ” ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை சென்னையில் மீண்டும் தொடங்க, விருப்பம் தெரிவித்த கடிதத்தை (LOI) தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். இந்நடவடிக்கைக்கு முதலமைச்சரின் ஒத்துழைப்பு முக்கியப்பங்களித்தது” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் கார் உற்பத்தியை விரைவில் தொடங்கும் என்பது உறுதியாகியுள்ளது.