விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-வது நினைவு நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவப்படத்திற்கும், சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்துவதற்காக வருகை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கே அவருக்கு கழக உடன்பிறப்புகள், இளைஞரணியினர், பொதுமக்கள் என அனைவரும் ஆரவாரமாக வரவேற்றனர். தொடர்ந்து பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தீண்டாமையை ஒழிக்கவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்! சமத்துவமும், சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சக அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தோம்.
நாட்டு விடுதலைக்காவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரது பிறந்த நாளை, நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவாக அறிவித்தார்கள். மேலும், திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு மணி மண்டபத்தையும் நம் திராவிட மாடல் அரசு அமைத்து வருகிறது. சமத்துவம் படைக்க சமரசமற்ற போராளியாக வாழ்ந்து மறைந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் புகழ் ஓங்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு (2023) இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் பரமக்குடியில் ரூ.3 கோடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.