சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர், மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அசோக்நகர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பிறகு பள்ளியில்’கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கை துவக்கிவைத்து உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,”அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்ற பெயரில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய விவகாரத்தில் நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடாக இருக்கும்.
4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்நபரை சும்மா விடமாட்டோம். அவர் மீது உரிய நடவடிக்கை கண்டிக்காக எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசியை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.