ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழா செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”ஓயாமல் நமக்காக உழைத்துக்கொண்டிருந்தவர் ஓய்வெடுக்கச் சென்றாலும், நமக்காக ஓயாமல் உழைக்கக் கூடிய இருவரை விட்டுச்சென்றார். தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
'Man is a two legged animal’ என்றார் தத்துவவியலாளர் Plato அவர்கள். அவரின் கூற்றுப்படி இரண்டு கால் உள்ள விலங்கிற்கு கல்விக் கொடுத்து அவனை மனிதன் ஆக்குபவர்கள்தான் ஆசிரியப் பெருமக்கள்.
ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு திருநாள்கள் உண்டு. அவரவர்களுக்கு என்று கடவுள்கள் உண்டு. ஆனால் அனைத்து மதத்தினருக்கும், அனைத்து மனிதர்களுக்கும் கடவுள் என்றால் அது ஆசிரியப் பெருமக்கள்தான். அனைத்து மதத்தினரும் கொண்டாடப்பட வேண்டிய திருவிழா இந்த ஆசிரியர்கள் தினம்தான்.
ஆசிரியப் பெருமக்களாகிய நீங்கள் இல்லையெனில் இந்த உலகம் கிடையாது. ஆசிரியப் பெருமக்களாகிய நீங்கள் இல்லையெனில் இந்த உலகம் இயங்காது என்பது மிகையில்லாத உண்மை!
‘உணவு இல்லாதவனுக்கு உணவும். உடை இல்லாதவனுக்கு உடையும். வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதுபோல கல்விக் கிடைக்காதவனுக்கு கல்விக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்’ என்கிறார் தந்தை பெரியார். இந்த நான்கு அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வருகின்றார்.
அண்ணா சொன்ன கதையை மேற்கோள் காட்டி உரையாற்றினார் அமைச்சர் அவர்கள். ‘நம்முடைய மொழியை நாம் கண் போலக் காத்து வருகின்றோம். அந்தக் கண்ணில் சிறிய எரிச்சல் உண்டானால் கூட உடல் முழுவது எரிச்சல் ஏற்படுவது போல இருக்கும். அந்தக் கண்ணுக்கு மையிடுவதை போல பிற மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். அந்த மையை திணிக்கக் கூடாது. வேண்டுமென்றால் மட்டுமே மொழி என்னும் கண்ணிற்கு மையிட வேண்டும். அந்த மை அதிகமானால் கண்ணை எப்படி எரித்துவிடுமோ, அதுபோல பிறமொழிகள் திணிக்கப்படும் போது ஆபத்து அதிகமாகும். இதை மத்திய அரசிலுள்ள தலைவர்கள் உணர்வார்கள்’ என்றார் பேரறிஞர் அண்ணா .
19 ஆண்டுகாலம் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 4 ஊதியக் குழுக்களை அமைத்தார். அந்த ஊதியக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியர்களின் சமூக-பொருளாதார நிலைகளை உயர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனை, ஆசிரியப் பெருமக்களுக்கு கையடக்கக் கணினிகளையும் வழங்கினார்.
எந்தத் தடைகள் வந்தாலும் எங்கள் திராவிட மாடல் அரசு என்றும் உங்களுடன் நிற்கும். நீங்கள் எங்களுடன் நிற்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது " என தெரிவித்துள்ளார்.