நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது நடைபெற இருக்கும் ஹரியானா, ஜம்முகாஷ்மீர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க படுதோல்வியடைய போகிறது. பா.ஜ.கவுக்கு இறங்கு முகம் தொடங்கி விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய து.ராஜா,”நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தோல்வியை மட்டும் கொடுக்கவில்லை. தி.மு.க கூட்டணிக்கு மகத்தான வெற்றியை கொடுத்து இருக்கிறார்கள். நாடு முழுவதும் பா.ஜ.கவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
தற்போது நடைபெற இருக்கும் ஹரியானா, ஜம்முகாஷ்மீர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க படுதோல்வி அடைவது உறுதி. விவசாயிகள் போராட்டத்தில் ஹரியானா மக்கள் முன்னணியில் இருக்கின்றனர். மேலும் பா.ஜ.க முன்னாள் எம்.பி பிரிஜ் பால் பூஷன் மீதான பாலியல் புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்காமல் உள்ளது. இதுபற்றி பிரதமர் மோடி கவலைப்படாமல் இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொருத்தவரை மாநிலம் துண்டு துண்டாக பா.ஜ.க உடைத்துவிட்டது. பா.ஜ.க அரசு பின்பற்றும் காஷ்மீர் கொள்கை படுதோல்வியை கண்டிருக்கிறது. அதேபோல் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் மக்கள் கொந்தளிப்பான நிலையில் இருக்கின்றனர்.
நாட்டு நலனில் பா.ஜ.க ஆட்சிக்கு அக்கறையில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என மக்கள் களத்தில் நிற்கின்றனர். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பாஜக தோல்வியடைவது உறுதி” என தெரிவித்துள்ளார்.