ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில், எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் யு. உதயகுமார் ஆஜராகி, 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு அனுமதி கேட்கும் போது பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் (Plaster of Paris) சிலைகளுக்கு அனுமதி கேட்க முடியாது என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட உள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். அதோடு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கக்கூடிய வகையிலான சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.