புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலகுடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய கிளையை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்கு பின் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் விட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடம் தமிழ்நாடு தான் என்று உணர்ந்து தொழிலதிபர்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது, "இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் விட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடம் தமிழ்நாடுதான் என்று உணர்ந்து தொழிலதிபர்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அதிக தொழிலதிபர்கள் வாருங்கள், அதற்கு என்னென்ன வசதிகள் தேவையோ அதை ஏற்படுத்தி தருகிறோம்.
தமிழகத்திலேயே தொழிற்சாலை துவங்குவதன் மூலமாக எங்களுடைய படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம். அதற்காக வாருங்கள் என்று தொடர்ந்து போராடிக் கொண்டு, பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று, தொழிலதிபர்களை சந்தித்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதன் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளத்தை பெருக்கி இன்று தொழில் வளத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.
இதனை பெருமையாக சொல்லும் வகையில் தமிழகத்தை தொழில்துறையில் முன்னணியில் கொண்டு செல்கிற மாநிலமாக தமிழக முதல்வர் மாற்றி இருக்கிறார். இளைஞர்களுக்கான எதிர்காலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதால்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுகிற முதல்வரை நாம் பெற்று இருக்கிறோம்.
பெண்களின் கல்வி அறிவை அதிகரிக்க செய்ய வேண்டும். இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி கற்க சென்றார்கள் என்றால் அது தமிழ்நாடுதான். அதற்குக் காரணம் தமிழக முதல்வர் தந்த புதுமைப்பெண் திட்டம்தான். இதைப் பார்த்து சில மாநிலங்களிலே இந்தத் திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி தமிழ்நாடு தான். எல்லா திட்டங்களையும் முன்னோடியாக தந்திருக்கிற முன்னோடி முதலமைச்சர் தமிழக முதல்வர் தான்" என்றார்.