கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைதுக்கு பயந்து கைது செய்வதற்கு முன்பே எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தற்போது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க குறிப்பில், காவேரிப்பட்டினம் காந்தி நகர் காலணியை சேர்ந்த சிவராமன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவராமனுடன் உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன் மற்றும் ஒரு அக்கா உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, சிவராமன் பல பெண்களிடம் தொடர்பில் உள்ளதை அறிந்த அவரது மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக சிவராமனை பிரிந்து குழந்தையுடன் தனியாக தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே கடந்த ஜூலை மாதம் சிவராமன் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது சிகிச்சைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் நிதி நிதி திரட்டப்பட்டது. ஆபத்தான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த சிவராமன், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடத்திய போலி என்சிசி முகாமில் 12வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தும், பிற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இத காரணமாக சிவராமன் மீது மேலும் பல்வேறு பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சிவராமன் பாலியல் தொல்லை வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என அச்சப்பட்டு கைது செய்வதற்கு முன்னரே (18ம் தேதி) எலி பேஸ்ட் பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவராமன் தப்பிக்க முயன்ற போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையின் போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்படவே போலீசாரிடம் தான் எலி மருந்து பேஸ்ட் தின்று தற்கொலைக்கும் முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல்நலம் மேலும் பாதிக்கப்படவே, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுவாசக் கோளாறு ஏற்பட்டு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.