2006-2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த போது கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுக்க , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது. அப்போதைய மேயர் சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்க சான்ஆண்டனியோ மாகனத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பின்னர் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கூவம் நதியை சீரமைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூலை மாதம் சான் ஆன்டனியோ மகாணத்துக்கு சென்ற மேயர் பிரியா சகோதர ஒப்பந்தத்தை புதுப்பித்தார்.
பின்னர் சென்னை மாநகராட்சியுடன் திட்டங்கள் பரிமாறிக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது. இதில், சான்ஆன்டனியோவில் உள்ள நதியை மீட்டெடுத்து சுற்றுலா தளமாக மாற்றியதை போல சென்னை கூவம் நதியை சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, சர்வதேச சுற்றுசூழல் மேம்பாடு மற்றும் அறிவியல் விவரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜெனிபர் லிட்டில் ஜான், அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹொட்ஜாஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர். மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ரிப்பன் மாளிகையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து கூட்டாக இணைந்து கூவம் நதியை நேரில் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் கனவுத் திட்டமான கூவம் நதி மீட்டெடுத்தல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய நீர்நிலைகளை சீரமைத்து மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.