அத்திக்கடவு - அவிநாசி திட்டம் யாரால்? - 2
2015ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநலவழக்கு போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள். தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமன்றத்தில் இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தார்கள். 'தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்' என்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். அப்போதும் அசையாமல் கிடந்தது அ.தி.மு.க. அரசு.
2016ஆம் ஆண்டு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அவிநாசியில் பலரும் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்கள்மீது வழக்கு போட்டது அ.தி.மு.க. அரசு. பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்த நிலையில் மனம் மாறினார் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. ஆய்வு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.3.27 கோடியை ஒதுக்கினார். முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை ஜெயலலிதா.
2017 ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, 'மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்' என்று அ.தி.மு.க. அரசு அறிவித்ததே தவிர, இந்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக 2018 ஆம் ஆண்டு 250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. அரசு. அது முழுமையான நிதி அல்ல. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்றைய முதலமைச்சர் பழனிசாமி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தாரே தவிர முழுமையான நிதியை ஒதுக்கவில்லை.
இன்றைக்கு ரூ.1,916.14 கோடி மதிப்பீட்டில் திட்டம் முடிவு பெற்றுள்ளது என்றால் திருத்திய நிர்வாக ஒதுக்கீட்டு ஒப்புதலை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
பழனிசாமி ஆட்சியில் காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய நிலம் கையகப்படுத்தவில்லை. தண்ணீர் எடுக்கும் பகுதியானது சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்புதல் பெறாமல் இருப்பதையும் தி.மு.க. அரசுதான் கண்டுபிடித்தது. அந்த விவசாயிகளை சந்தித்து விருப்பங்களை கேட்டறிந்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் கேட்கும் இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்த பின்னர் பணிகளை தி.மு.க. அரசுதான் துவங்கியது. வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி தன்னை முழுமையாக இப்பணிக்கு ஒப்படைத்துக் கொண்டார். மூன்று நீரேற்று நிலையங்களை அமைப்பதற்கான இடத்தை தி.மு.க. அரசுதான் வாங்கியது. பழனிசாமி வாங்கவில்லை.
மேட்டுநாவிதன் பாளையத்தில் 14 விவசாயிகள், எலவமலை கிராமத்தில் 34 விவசாயிகள், இரண்டாவது நீரேற்றும் நிலையம் செல்வதற்கான முக்கிய பாதை அமைக்க 16 விவசாயிகள் என மொத்தம் 61 விவசாயிகளிடம் அமைச்சர் முத்துசாமி, பல முறை பேசி உடன்பட வைத்து உடன்படிக்கைசெய்து கொண்ட பிறகுதான் இத்திட்டம் முழுமை பெற்றது. இந்த 61 விவசாயிகள் ஒப்புதல் தராமல் இருந்திருந்தால் ஒட்டுமொத்த திட்டமும் செயல்படுத்த முடியாமல் போயிருக்கும். இவர்களை பழனிசாமி அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை. இவர்களிடம் பேசவே இல்லை.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தனது ஆட்சி காலத்திலேயே முடித்து விட்டதாகச் சொல்கிறாரே பழனிசாமி! அது உண்மையா? சுத்தப் பொய்.
MS குழாய் பதிக்கும் பணி 267 கி.மீட்டர் தூரம் நடக்க வேண்டும். 116 கி.மீட்டர் மட்டும்தான் பழனிசாமி ஆட்சியில் முடிந்தது. தி.மு.க. ஆட்சியில்தான் 151 கி.மீட்டருக்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. HDPE குழாய்கள் பதிக்கும் பணி 797 கி. மீட்டருக்கு நடக்க வேண்டும். 525 கி.மீட்டர் மட்டும் தான் பழனிசாமி ஆட்சியில் முடிந்தது. 272 கி.மீட்டர் பணிகளை தி.மு.க. ஆட்சிதான் முடித்தது. 117 கி.மீட்டருக்கான நிலம் எடுப்புப் பணிகளை தி.மு.க. ஆட்சிதான் செய்தது. மின்மாற்றிகள், மின் மோட்டார்கள், பம்புகள், பேனல் போர்டுகள் பொருத்தும் 60 விழுக்காடு பணிகள் தி.மு.க. ஆட்சியில்தான் செய்யப்பட்டன.
மின் கம்பங்கள் அமைத்தல், பூமிக்கு அடியில் மின் தொடரமைப்புகள் பதித்தல் என்பது 78 கி.மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பழனிசாமி ஆட்சியில் 22 கி.மீட்டர்தான் நடந்தது. தி.மு.க. ஆட்சியில்தான் 52 கி.மீட்டர் பணிகள் நடைபெற்றன. குளம், குட்டைகளில் நீர் வெளியேற்றும் அமைப்பு பழனிசாமி ஆட்சியில் செய்யப்படவே இல்லை. 1045 வெளியேறும் அமைப்புகள் தி.மு.க. ஆட்சியில் தான் செய்யப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் குழாய்கள் பதித்த போது சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களிடம் அ.தி.மு.க. அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் குழாய் பதிக்கும் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டது. 2022 ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார்கள். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியது.
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட குழாய்களில் சில 2023 ஆகஸ்ட் மாதம் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. தி.மு.க. ஆட்சியில்தான் அவையும் சரி செய்யப்பட்டன. சில கட்டுமானப் பணிகளை மட்டும் செய்துவிட்டு, 'திட்டம் முடிந்துவிட்டது' என்கிறார் பழனிசாமி. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கும் ஆர்.டி.ஓ. ஆபீஸ் கட்டுவதற்குமான வித்தியாசம் கூட அவருக்குத் தெரியவில்லை.
அனைத்துப் பணிகளையும் மிகத் துல்லியமாக இந்த மூன்றாண்டு காலத்தில் முடித்துக் காட்டினார் முதலமைச்சர் அவர்கள். பவானி ஆற்றில் உபரி நீர் வருகைக்காக காத்திருந்தது தமிழ்நாடு அரசு. உபரி நீர் வந்தால் தான் அது திட்டத்தின் தொடக்கமாக அமையும். 'உபரி நீர் வந்ததும் திட்டம் தொடங்கப்படும்' என்று தொடர்ச்சியாக சொல்லி வந்தார் அமைச்சர் முத்துசாமி. அந்த அடிப்படையில் இப்போது உபரி நீர் வந்ததும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர். இதில் என்ன குறையைக் கண்டார் பழனிசாமி?
ஆயிரம் நீர் நிலைகள் நிரம்பி, 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சியின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. அதிகமான நீர்நிலைகளை நிரப்பி நீரேற்றும் வகையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீரேற்றும் திட்டமாக இது அமைந்துள்ளது. மேற்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது தி.மு.க. அரசு.
- முரசொலி தலையங்கம்!