நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட, நடைபெற்று வரும், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னை மாநகரம் மிகவும் பழமையானது. இது தமிழ்நாட்டின் பெருமைக்குரிய மாநகரம். நம்முடைய கழக அரசு சென்னைக்காக பேரறிஞர் அண்ணா ஆட்சி காலம் முதல் நம்முடைய முதலமைச்சர் ஆட்சி காலம் வரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சென்னையின் அடையாளமாக பல்வேறு கட்டுமானங்களை அமைத்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான். அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகளில் திமுக வென்றுள்ளது என்றால் அது கழக அரசின் வளர்ச்சி பணிகள் தான் காரணம். அப்படிப்பட்ட சென்னை மக்கள் மீது நம்முடைய கழக அரசும், நமது முதலமைச்சரும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்து, வழிநடத்தியவர் நம்முடைய முதலமைச்சர். மாநகராட்சியின் அனைத்து பணிகளையும் அறிந்தவர் நம்முடைய முதலமைச்சர். அதனால் தான் 3040 கிலோமீட்டர் தூரம் நீளமுள்ள மழை நீர் வடிகால்களில், முதற்கட்டமாக 611 கிமீ தூரம் வடிகால்கள் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 2021 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை 3000 கோடி மதிப்பீட்டில் 745 கிமீ தூரத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 கோடி மதிப்பீட்டில் 400 கிமீ நிளத்திற்கு, புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மழை காலத்தை மனதில் வைத்து பல்வேறு தொடர் நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துக்கொண்டு வருகிறார். ஆனாலும் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கிகிறது நாம் எடுத்து வரும் பணிகளை விரைவாக முடித்தாலே எங்கும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்படும். நகராட்சி, நெடுஞ்சாலை, மின், நீர்வளம் என அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள். கூடுதலாக மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்புடன் பணியாற்றினால் இன்னும் பணிகள் சிறப்பாக செய்திட முடியும். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளிடம் கொண்டுவரும் மக்களின் பிரச்சினைகள் குறித்தான கோரிக்கைக்கு, கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கூட்டம் வெறும் கலந்துரையாடல் கூட்டம் அல்ல, மக்களுக்கான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை கூட்டம். அதை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சென்ற ஆண்டு மழையால் மக்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த வருடம் மழைக்காலத்திற்கு முன்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.அடுத்த 15 ஆம் நாளில் இதுபோன்ற அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இடையில் உள்ள 15 நாட்களில் மேற்கொண்ட பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் வேண்டும் என துறை சார்ந்த அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.