தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.08.2024) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 32 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 விடுதிக் கட்டடங்கள், 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 14 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 32 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், அம்மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 196.65 கோடி ரூபாய் செலவில் 415 பள்ளிக் கட்டடங்கள், 127.92 கோடி ரூபாய் செலவில் 71 விடுதிக் கட்டடங்கள், 17.43 கோடி ரூபாய் செலவில் 28 சமுதாய நலக்கூடங்கள் மற்றும் 61.76 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர், கழிப்பறைகள் போன்ற இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் திறந்து வைத்தல் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் – தேவகோட்டை ஆகிய இடங்களில் 6 கோடியே 71 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான 2 விடுதிக் கட்டடங்கள்;
தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம், ஆறுமுகனேரி, குலசேகரப்பட்டினம், நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், இராசிபுரம் ஆகிய இடங்களில் 11 கோடியே 32 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்கள்;
கள்ளக்குறிச்சி மாவட்டம் – மூலக்காடு, மேல்வாழப்பாடி, கிளாக்காடு, மணியார்பாளையம் மற்றும் அரசம்பட்டு ஆகிய இடங்களில் 8 கோடியே 95 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நலப் பள்ளி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்கள்;
வேலூர், விருதுநகர், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பந்தட்டை, சென்னை மாவட்டம் – வேப்பேரி ஆகிய இடங்களில் 6 கோடியே 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 4 விடுதிக் கட்டடங்கள்;என மொத்தம் 32 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 16 விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிக் கட்டடங்கள் திறந்து வைத்தல்
திருவள்ளூர் மாவட்டம் – பெரும்பேடுகுப்பம், செங்கல்பட்டு மாவட்டம் – புலிக்குன்றம், மதுரை மாவட்டம் – செம்பியனேந்தல், தேனி மாவட்டம் – டி.பொம்மிநாயக்கன்பட்டி, பி. துரைராஜப்புரம், அம்மாச்சியாபுரம், சேலம் மாவட்டம் – மாட்டுக்காரனூர், சிக்கனம்பட்டி, சிவகங்கை மாவட்டம் – அதிகாரம், கடலூர் மாவட்டம் – ஊமங்கலம், சேப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் – பிடாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – பழையபாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம் - சிறுவங்கூர் ஆகிய இடங்களில் 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் நல சமுதாய கூடங்களை திறந்து வைத்தல்
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாமக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 32 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 ஆதிதிராவிடர் நல சமுதாய கூடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.