சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் பெண்களுக்கு சுய சக்தி என்னும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி வருகிறது. இதன் 7ம் ஆண்டு சுய சக்தி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் அரசியல் சமூகம், கல்வி, தொழில், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது, அரசியல் களத்தில் பெண்ணாக சாதனை புரிந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு, 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பின் மேடையில் பேசிய கனிமொழி, " பெண்களின் சாதனைகளை இதர பெண்களும், மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இந்த விருதுகள் வழங்கும் விழா உள்ளது. அரசியல் ஆண்களுக்காக கட்டமைக்கப்பட்டுள்ள உலகமாக உள்ளது, அரசியலில் மட்டுமல்ல பெண்கள் மற்ற துறையிலும் பெண்கள் வருவது கடினம், எதற்கும் பயப்படாமல் எதையும் உடைக்க முடியும் என்ற தைரியத்துடன் இருந்தால் நிச்சயம் வெற்றி தான்" என தெரிவித்தார்
பின்னர் தொகுப்பாளர்கள் திரையில் சில தலைப்புகளை குறித்து பதிவிட்டு அவை குறித்து கனிமொழி மனதில் தோன்றுவதை கூறுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதன் விவரம் :
நம்பிக்கை என்னும் தலைப்பில் இடம்பெற்று இருந்த 2026 என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, "2026 தேர்தல், அதில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.
பாராட்டு என்ற தலைப்புக்கு பின் இருந்த மோடி என்ற கேள்விக்கு, "நிச்சயமாக நான் பாராட்ட வேண்டும் என்று எனக்கு ஆசைதான், குறைந்தபட்சம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீதியை வழங்கி விட்டால், நிச்சயமாக மனதார பாராட்டுவேன்" என்று கூறினார்..
பாசம் என்ற தலைப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் என்ற கேள்விக்கு, "முதலமைச்சர், தலைவர் என்பதை தாண்டி மிகப் பாசமான அண்ணன், நாடாளுமன்றத்தில் நான் அவையில் பேசும் பொழுது எனக்கு குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து அனுப்புவார். அவை முடிந்ததும் உடனடியாக தொலைபேசியில் என்னை அழைத்து வாழ்த்துவார்" என்று தெரிவித்தார்.
எச்சரிக்கை என்ற தலைப்பில் இருந்த உதயநிதி ஸ்டாலின் என்ற கேள்விக்கு, "எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் உதயநிதியிடம் எச்சரிக்கையாக இருங்கள்" என்று கூறினார்.
காதல் எனும் தலைப்பில் தூத்துக்குடி என்ற கேள்விக்கு, " மிகவும் எதார்த்தமான மக்கள் தூத்துக்குடி சேர்ந்தவர்கள். என் சொந்த ஊரான தஞ்சாவூர், சென்னை போல தூத்துக்குடியின் மீதும் காதல் உள்ளது" என்று கூறினார்.
கோபம் என்னும் தலைப்பில் கலைஞர் என்ற கேள்விக்கு, "ஏராளமான விஷயத்திற்கு இருவரும் கோபக்கொண்டு விவாதிப்போம், குறிப்பாக இரவு நேர பயண சமயத்தில் எங்கிருக்கிறாய் என தொடர்ந்து, அடிக்கடி அழைத்து கொண்டே இருப்பார். அப்போது அவர் மீது அதிகம் கோவம் வரும்.
ஒருமுறை டெல்லிக்கு சொல்லும் போது இரவு அதிக நேரம் ஆகிவிட்டது, அப்பொழுது என் மீது அதிகம் கோபித்துக் கொண்டார். நானும் அவர் மீது அதிகம் கோபம் கொண்டேன். ஒவ்வொரு முறை டெல்லியில் நான் அவரிடம் தொலைபேசியில் கோபம் கொண்டு விவாதித்த இடத்தை கடக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது அவர் இல்லையே என்ற உணர்வு தான் வந்து கொண்டே இருக்கும்" என்று கூறினார்.