கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பாடல் படி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிபதியால் கண்டிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது அக்கட்சியின் தலைவர் சீமான், பொதுமேடையில் ஆபாச வார்த்தைகளில் பேசி மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தனது எல்லையை மீறி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளார். வார்த்தைக்கு வார்த்தை ஆபாச வார்த்தை பேசியதோடு, காளியம்மாள் விவகாரத்தை பற்றியும் பேசினார். மேலும் காவல்துறையினரை பற்றியும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார்.
பொதுமேடையில் தொண்டர்கள் மத்தியில் அவ்வளவு ஆபாச வார்த்தைகளை பேசிய சீமானுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு எதிராக கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். ஜனநாயகம், நீதிமன்றம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுகளை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.