தமிழ்நாடு

”மக்களை ஏமாற்ற நினைப்பவர்களை அம்பலப்படுத்துவோம்” : வானதி சீனவாசனுக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!

நான் பொய்சொல்லவில்லை ரயில்வே அமைச்சர் உண்மையை சொல்லவில்லை என வானதி சீனவாசனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

”மக்களை ஏமாற்ற நினைப்பவர்களை அம்பலப்படுத்துவோம்” : வானதி சீனவாசனுக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்த ஆண்டு ரயில்வேக்கு ரூ.2 லட்சத்து 55,000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறீர்களே, அதில் தமிழகத்தின் அகலப்பாதை திட்டத்துக்கு எவ்வளவு? என பா.ஜ.க நிர்வாகி வானதி சீனவாசனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவையில் இரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வானதி சீனிவாசன் அவர்களே, இரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா இல்லையா?வருடந்தோறும் 12 கோடி பேர் பலன் பெற்ற மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகையை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா, இல்லையா?

இவ்வளவு விபத்துகள் நடந்த பின்பும் பாதுகாப்புக்கான கவச் எந்திரம் என்ற சொல்லே இல்லாமல்,அதற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரமே இல்லாமல் பொது பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது உண்மையா, இல்லையா?ரயில்வேயின் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் அடங்கிய "பிங்க் புத்தகம்" இப்பொழுது வரை வெளியிடப்படவில்லை. இது உண்மையா, இல்லையா?

ஆவணங்களை வெளியிடாமலே இரயில்வே துறையின் விவாதங்களை நடத்தி முடித்துவிட்டது மோடி அரசு. இது உண்மையா, இல்லையா?. இந்த ஆண்டு ரயில்வேக்கு 2 லட்சத்து 55,000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறீர்களே, அதில் தமிழகத்தின் அகலப்பாதை திட்டத்துக்கு எவ்வளவு? இரட்டை பாதை திட்டத்துக்கு எவ்வளவு? புதிய வழித்தடங்களுக்கு எவ்வளவு? மின்மயமாக்கலுக்கு எவ்வாளவு? இந்த ஒதுக்கீட்டு விபரங்கள் அடங்கிய பிங்க புத்தகம் எங்கே? இந்த எளிமையான கேள்விகள் தான் எங்களுடையது. இதில் கட்டுகதைகளும், மக்களை ஏமாற்றும் முயற்சியும் எங்கே இருக்கிறது?முழுமையான ஆவணங்களை வெளியிடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் உண்மைகளை தெரிந்து கொள்ளட்டும்.

தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும் மூன்று முக்கிய இரட்டை பாதை திட்டங்களுக்கும் கடந்த காலத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனை நான் சுட்டிக்காட்டிய பின் 2023 -24 பட்ஜெட்டில் 50 கோடி 100 கோடி என்று ஒதுக்கப்பட்டது. ஆனால் அது பாதுகாப்பு நிதி என்று கூறி திரும்பப் பெறப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது பூஜ்ஜியம் தான்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு 150 கோடி ஒதுக்கப்பட்டது. அது தேர்தலுக்காக செய்யப்பட்ட வெற்று அறிவிப்பா? அல்லது உண்மையான ஒதுக்கீடா என்பது பிங்க் புத்தகம் வந்தால் தெரிந்துவிடும்.

தேர்தலுக்காக வந்த பாஜக அமைச்சர்கள் மதுரை எய்ம்ஸ்கான வேலையெல்லாம் முடிந்து கட்டிடப்பணி துவங்கிவிட்டது என்று கூறினார்கள். ஆனால் இன்று மக்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு நட்டா அவர்கள் ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்ட பின்னர் பணிகள் துவக்கப்படும் என்கிறார்.

வானதி சீனிவாசன் அவர்களே! ரயில்வே துறையில் தமிழ்நாட்டின் உரிமை, பயணிகளின் பாதுகாப்பு, ஊழியர்களின் நலன், இவைகளுக்காக தொடர்ந்து நாங்கள் குரல்கொடுப்போம். அவைகள் மக்களை ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories