சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் ஜெகநாதன் தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்ணோக்கு மையத்தில் அமைய உள்ள பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கொளத்தூர் டயாலிசிஸ் மைய இடத்தினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ரெட்ஹில்ஸ் சாலையில் அமைய உள்ள புதிய அங்காடி இடத்தினையும் , மக்கள் சேவை மையம் அமைய உள்ள இடத்தினையும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, " கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பணிகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருகிறார். கொளத்தூர் பகுதி மக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், துணை பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடவும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நமது முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சி துணை தலைவருக்கு எங்கு என்ன பணி நடைபெறுகிறது என்று தெரியாது. ஏன் என்றால் சென்னையை பற்றி ஆர்.பி.உதயகுமாருக்கு தெரியாது.
கொரொனா காலத்தில் இவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள். அப்போதே மக்கள் காக்கும் பணியில் ஈடுபட்டவர்தான் நமது முதலமைச்சர் அவர்கள். நாங்கள் ஆட்சியல் இல்லாதபோது கூட அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து உள்ளோம். தற்போது ஆட்சியில் வந்த பிறகு கூட 3 ஆண்டுகளில் அம்மா உணவகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தது உண்டா?. எதிர்க்கட்சிகள் சொல்லும் கடுமையான விமர்சனங்கள் அரசியல் நாகரீகமற்றவை. நாங்களும் அவ்வாறு பேச விரும்பவில்லை. மக்கள் பணிதான் முதல் பணி." என தெரிவித்துள்ளார்.