முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வதற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டு தனது ஆதரவாளர்களை கொண்டு பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது பொதுச் செயலாளர் என எப்படி குறிப்பிடலாம்?. இணை ஒருங்கிணைப்பாளர் என முன்பு மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி தற்போது பொதுச் செயலாளர் என மனுவில் குறிப்பிட்டதை எப்படி ஏற்க முடியும்?.” கேள்வி எழுப்பி கண்டித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ந்த மனுவை எப்படி பதிவுதுறையில் பதிவு செய்தீர்கள் என உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, திருத்த மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.