சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-(Everything for everyone) " தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, திரைப்பட நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு OTT தளத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது கனிமொழி எம்.பி., மேடையில் பேசியதாவது, "தொடர்ந்து சுயமரியாதைகாரராக இருப்பது கடினம். அதிலும் சினிமா துறையில் தொடர்ந்து அதை கடைப்பிடித்து வருகிறார் சத்யராஜ். Liberty இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம்.
அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த Liberty-யும் கிடையாது. எல்லாருடைய Liberty-காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.
மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும், தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்த மனிதனை மனித நேயத்துடன் பார்த்த தலைவர் நிச்சயம் அறிவியலை நேசிக்கதான் செய்வார். இன்று வரை நகைச்சுவை என்ற பெயரில் பெண்களுக்கு சமைக்க தெரியுமா? என்பார்கள். என்னை, அருள்மொழியை பார்த்து கேட்பார்கள்.
பெண் என்றால் சமைக்க தெரிய வேண்டும் என்று இப்பொழுதும் உள்ளது. குழந்தைகள் வேண்டுமென்றால் பெற்றுக் கொள்வோம், எத்தனையோ குழந்தைகள் தாய், தந்தை இல்லாமல் உள்ளனர் என்று இப்போது சொல்லும் கருத்துகளை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் சிந்தித்து நமக்காக சொல்லித் தந்திருக்கக் கூடியவர் லட்சியங்கள் அடைய எதிர் தடையாக வந்தாலும் அதை உடைக்க சொன்னவர். மக்களிடையே இருந்த மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர் பெரியார்.
டெக்னாலஜி வழியாக ஒவ்வொரு நாளும் தவறான செய்திகள், வெறுப்பு, காழ்புணர்ச்சி, மனித இனத்திற்கு எதிரான செய்திகள் என பரப்பி வருகிறார்கள். மக்களை மூடநம்பிக்கைகளை நோக்கி 50 ஆண்டுகளுக்கு பின்னான சிந்தனைகளை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி தொடர்ந்து பயன்படுத்தி தவறான செய்திகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில் இந்த டெக்னாலஜி நாமும் கையில் எடுத்துள்ளோம். குழந்தைகளுக்கு பழைய விஷயங்களை சொல்லித்தர மாட்டோம். தமிழர்களுக்கு மறதி உள்ளது. எங்கிருந்து வந்தோம், எதை தக்கது வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை. எத்தனையோ போராட்டக்காரர்கள் திராவிட சிந்தனையாளர்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லித்தராமல் இருக்கிறோம்.
இப்போது வந்து பெரியார் சிலை மேல் காவி சாயம் ஊற்றுகிறார்கள், சிலைகள் பேசும் என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் நீங்கள் செருப்பு மாலை போடும்போது ஜோடி செருப்பாக போடுங்கள் இல்லை என்றால் பயன்படாது என்று சொல்லி இருப்பார். இவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போதுதான் இந்த தலைமுறைகள் யார் இந்த மனிதன் என்று அறிய முற்படுகிறார்கள்.
வடமாநிலத்தில் ஒரு போராட்டத்தின்போது கூட பெரியாரின் புகைப்படம் வைக்கப்படுகிறது. இதற்காக பாஜகவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து, உங்களுக்கென்று கருத்துகள் இல்லை. அதனால், உங்களுக்கு தெரிந்த விதங்களில் எங்களை எதிர்த்து நின்று கொண்டே இருங்கள். அடுத்த தலைமுறை மக்களிடம் அப்போதுதான் எங்கள் கருத்து விதைகளை விதைத்து கொண்டே இருக்க முடியும்.” என்றார்.