சென்னை வெப்பெரியில் உள்ள பெரியார் திடலில் 'பெரியார் விஷன்' என்ற OTT தளம் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நடிகர் சத்யராஜ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, PERIYAR VISION OTT தளத்தை தொடங்கி வைத்து அறிமுகப்படுத்தினர்.
PERIYAR VISION OTT-ல் பகுத்தறிவு உரையாடல்கள், நேர்காணல்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், வலைத்தொடர்கள், வகுப்புகள் ஆகியன இடம்பெறும். ஒலி - ஒளிப் புத்தகங்கள், இசை ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை முன்னிறுத்திய படைப்புகள் இடம்பெற்றுள்ளது.
பெரியார் திரைப்படத்தைத் தயாரித்த லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் "Periyar Vision" OTT-யை உருவாக்கி வெளியிடுகிறது. இது ஆண்டிராய்டு டிவிகளிலும், ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு செல்பேசிகளிலும் பார்க்கத்தக்க வகையில் உள்ளது. தொடக்க விழா சலுகையாக 2 மாத கட்டணம் ரூ.49, 6 மாத கட்டணம் ரூ.147, இரண்டு ஆண்டு கட்டணம் ரூ.588 ஆகும்.
இந்த புதிய ஓடிடி தளத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது, "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன்னை மானமிகு சுயமரியாதைகாரன் என சொல்லிக்கொள்வார். தந்தை பெரியார் செய்த அமைதி புரட்சியில் சுயமரியாதை வளர்ந்து கொண்டிருக்கிறது.
பெரியார் தன்னை பூரண பகுதறிவுவாதி என அடையாளப்படுத்திக் கொண்டார். தந்தை பெரியாரின் தொலைநோக்கு பார்வை என்னவென்றால், அவரின் கொள்கைகள். அடுத்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் அனைத்து வளர்ச்சிகள் குறித்தும் மக்களுக்கு எளிமையாக எடுத்துரைத்தார். அறிவுக்கு எல்லை நிர்ணயிக்க முடியாது என தந்தை பெரியார் கூறுவார்.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பின்பு வரும் தலைமுறையினர் தந்தை பெரியார் என்ற பிற்போக்குவாதி இருந்தார் என சொல்வார்கள். ஏனெனில் அறிவு பல அளவில் வளர்ந்திருக்கும் என்று அன்றே அவர் தெரிவித்தார். சுயமரியாதைக்காரர் தந்தை பெரியார். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், மக்களிடம் பல மூடநம்பிக்கைகள் ஒளிந்து இருக்கிறது.
எனவே தந்தை பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்; என்றும் தேவைப்படுவார். எந்த ஊரில் பெரியாரை எதிர்த்தார்களோ, அதே ஊரில் இன்றைக்கு அவருக்கு சிலை வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் பெரியார். நம்முடைய சமூதாயத்திற்கு பெரியார் தேவை. அந்த பெரியாரை ஓடிடி மூலமாக இந்த இளைஞர்கள் கொண்டு வந்துள்ளார்கள்.
திமுகவின் இளைஞரணியின் 45-வது தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அவருடைய பேச்சு இன்னும் வேகமாக இந்த இயக்கத்தை வளர்க்கும் என நம்பிக்கை வந்துள்ளது. டெக்னாலஜி வளர்ந்துள்ளது. ஆயுத பூஜையின் போது கம்பியூடர்க்கு விபூதி பூசுவதில்லை. ஏன் என்றால், அது வேலை செய்யாமல் போய்விடும் என்பதற்காக. பெரியார் இன்று தேவைப்படுகிறார். கலைஞர் கூறுவார் பெரியார் என்றும் தேவைப்படுவார் என்று.
வடமாநிலத்தில் சாமியாரை பார்க்க போகும்போது கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் இறந்து போகிறார்கள். கேட்டால் விதி என்கிறார் அந்த சாமியார். இப்படி தமிழகத்தில் ஒரு சாமியாராவது பேசிவிட முடியுமா? பெரியார் என்றால் மனித நேயர். பெண் அடிமை பற்றியும், சுயமரியாதை திருமணத்தை பற்றியும் அந்த காலத்திலே கேள்வி கேட்டவர் பெரியார்" என்றார்.