திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
இதற்கு முன்னதாக, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப்பிட்டு பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வுடன் நான் உருவாக்கிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம்.பசிப்பிணிப் போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த பட்டதற்கு ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான இன்று 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுவதை மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். இது மனித நேயச் செயல்திட்டம். மேலும், பொருளாதார நல்விளைவுகளை ஏற்படுத்தும் திட்டம். முதலமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.” என தெரிவித்துள்ளார்.