தமிழ்நாடு

கடனுதவி முதல் புத்தாக்க சான்றிதழ் படிப்பு வரை... சிறு, குறு தொழில் துறையின் 35 அறிவிப்புகள் என்ன?

கடனுதவி முதல் புத்தாக்க சான்றிதழ் படிப்பு வரை... சிறு, குறு தொழில் துறையின் 35 அறிவிப்புகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், அமைச்சர்கள் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனது துறைக்கான திட்டங்களை அறிவித்தார்.

அதன் பட்டியல் வருமாறு :

1. குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெறுவதினை (ரூ.20 லட்சம் வரை) எளிதாக்கும் வகையில் தாய்கோ வங்கி அளிக்கும் கடனுக்கு தற்போது ஆண்டுக்கு 10 விழுக்காடு வட்டி விகிதம் என்ற அளவில் இருந்து 7 விழுக்காடு என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வகையில் கலைஞர் கடனுதவி திட்டம் ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படும்.

குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் தாய்கோ வங்கி மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் கடனுக்கு 10 விழுக்காடு என்ற வட்டி விகிதத்திலிருந்து 7 விழுக்காடாக குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில், ஒரு நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் வகையில் கலைஞர் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும். 2024-2025-ஆம் நிதியாண்டில் இதற்கென ரூ.100 கோடி தாய்கோ வங்கியால் ஒதுக்கப்படும்.

2. நீடித்த நிலையான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முன்னேற்றம் அடையும் நேர்வு தொழிலாக (Thrust Sector) வகைப்படுத்தப்பட்டு சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

நீடித்த நிலையான பொருட்களானது மூலப்பொருள் நிலையிலிருந்து கழிவு நிலை வரை அதன் முழு வாழ்க்கை சுழற்சியில் சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக அமைவதோடு மனித ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.

நீடித்த நிலையான பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முன்னேற்றம் அடையும் நேர்வு தொழிலாக வகைப்படுத்தப்பட்டு அந்நிறுவனங்களுக்கு 25% சிறப்பு முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.

3. படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தற்பொழுது வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பு ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.8 இலட்சமாக உயர்த்தப்படும். மேலும், தொழில் தொடங்கவுள்ள மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படும். இதன் மூலம் அதிகப்படியான வேலையில்லா படித்த இளைஞர்கள் பயன்பெற இயலும்.

வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிக தொழில்முனைவோராகுவதை இளைஞர்கள் ஊக்குவிக்கும் வகையில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பிற சுயவேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு இணையாக படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தற்பொழுது வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (UYEGP) தொழில் தொடங்கவுள்ள மாவட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படும்.

4. கல்லூரி மாணவர்களை, தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கத்துடன் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 கோடி செலவில், துறையின் அனைத்து திட்டங்கள் குறித்த, திட்ட விளக்கக்கூட்டங்கள் நடத்தப்படும்.

கல்லூரி அளவிலேயே தொழில் முனைவு மற்றும் புத்தாக்க சூழல் மேம்பாட்டை கல்லூரி மாணவர்களிடம் வளர்த்திடும் நோக்கத்துடனும், அவர்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை தேடுவதற்கு மாற்றாக வேலைவாய்ப்பை வழங்குபவராக உருவாக்கிட வேண்டி, குறிப்பாக இறுதியாண்டு கல்லூரி மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு, இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவுத் திட்டங்கள் குறித்த திட்ட விளக்க கூட்டங்கள் நடத்தப்படும். இப்பரப்புரை மேற்கொள்ள ரூ.1 கோடி செலவிடப்படும்.

5. தென்னைநார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்த பொள்ளாச்சியில் ஏற்றுமதி மையம் தொடங்கப்படும்.

2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் இலக்கினை நோக்கமாகக்கொண்டு, தென்னைநார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மையமாக விளங்கும் பொள்ளாச்சி பகுதியில் ஏற்றுமதியை மேலும் மேம்படுத்த தேவையான கட்டமைப்புகளை ருவாக்கிட ஏற்றுமதி மையம் தொடங்கப்படும். இந்த முயற்சி ஏற்றுமதியை அதிகரிப்பதோடு, தரம் மற்றும் சர்வதேச போட்டித்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றையும் அளிக்கும்.

கடனுதவி முதல் புத்தாக்க சான்றிதழ் படிப்பு வரை... சிறு, குறு தொழில் துறையின் 35 அறிவிப்புகள் என்ன?

6. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்புகள் நடத்தப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்புகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும்.

7. உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயலாக்குவதற்கு உயர்நிலை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயலாக்குவதற்கு உயர்நிலை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.

8. மாற்றுத்திறன் படைத்தவர்களை பணியில் அமர்த்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியம் வழங்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் புதிதாக தொடங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களின் மொத்த பணியாட்களின் எண்ணிக்கையில் 25 விழுக்காட்டிற்கு மேல் மாற்றுத்திறன் படைத்தவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியமாக ஒரு மாற்றுத்திறனாளி பணியாளருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வரை, உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

9. தோல் பதனிடும் தொழில் நிறுவனங்களுக்கு, மரபு சார்ந்த மரஉருளைகளை, பாலிபுரொப்பைலீன் உருளைகளாக (Polypropylene drums) மாற்ற முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

தோல் பதனிடும் தொழில் நிறுவனங்களுக்கு, மரபு சார்ந்த மரஉருளைகளை பாலிபுரொப்பைலீன் உருளைகளாக (Polypropylene drums) மாற்ற 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும்.

10. குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சர்வதேச தரச்சான்றிதழ்களை புதுப்பிக்க மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதியினை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே தரச்சான்றிதழ் மானியம் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சர்வதேச தரச்சான்றிதழ்களை முதன் முறையாக புதுப்பிக்க செலுத்தும் கட்டணத்தில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

11. சென்னை தொழிற் கூட்டுறவு பகுப்பாய்வு கூடம் லிட்., (M I C A L ) - க்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி நவீனப்படுத்தவும், NABL அங்கீகாரம் பெறவும் ரூ.43 இலட்சம் செலவிடப்படும்.

சென்னை மாவட்டத்திலுள்ள சென்னை தொழிற் கூட்டுறவு கூட்டுறவு பகுப்பாய்வு கூடம் லிட்., (MICAL)-க்கு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் விதிகள், 1945-இன், L1 அட்டவணையின்படி மேம்படுத்தவும், NABL அங்கீகாரம் பெறுவதற்கும் மற்றும் தற்போதைய ஆய்வகத்தை நவீனப்படுத்தவும் அரசின் நிதியுதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.43 இலட்சம் செலவிடப்படும்.

12. மதுரையில் உள்ள மண்டல பரிசோதனை ஆய்வகம் N A B L - க்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி நவீனப்படுத்தவும், NABL அங்கீகாரம் பெறவும் ரூ.1.97 கோடி செலவிடப்படும்.

மதுரையில் உள்ள மண்டல பரிசோதனை ஆய்வகம் சுமார் ரூ.1.97 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டு NABL தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

13. காக்களூரில் உள்ள மத்திய மின் பொருள் சோதனைக் கூடத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி நவீனப்படுத்தி தானியங்கி மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள மத்திய மின் பொருள் சோதனைக் கூடத்தின் சில சோதனை வசதிகள் ரூ.90 இலட்சம் செலவில் தானியங்கிமற்றும் டிஜிட்டல்மயமாக்கப்படும்.

14. நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 16 தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு, தேயிலை அறுவடை இயந்திரங்கள் ரூ.1.60 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.

தேயிலை இண்ட்கோ தேயிலை தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ள சிறு விவசாயிகளால் வழங்கப்படும் பசுந்தேயிலையின் தரத்தை மேம்படுத்தவும், தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனையை போக்கவும் நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 16 தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பேட்டரி மூலம் இயக்கப்படும் 1000 எண்ணிக்கையிலான தேயிலை அறுவடை இயந்திரங்கள் மொத்தமாக ரூ.1.60 கோடிமதிப்பீட்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (SADP) கீழ் கொள்முதல் செய்யப்படும்.

15. நீலகிரி மாவட்டம் கைக்காட்டி மற்றும் கிண்ணக்கோரை தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு, 12 பசுந்தேயிலை பகுப்பாய்வு இயந்திரங்கள் ரூ.67.73 இலட்சத்திற்கு கொள்முதல் செய்யப்படும்.

நீலகிரி மாவட்டம் கைக்காட்டி மற்றும் கிண்ணக்கோரை தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் ஆர்த்தோடாக்ஸ் முறையில் தேயிலைத்தூள் தயாரிப்பதற்கு தரமான பசுந்தேயிலையினை உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கும் பசுந்தேயிலையின் தரத்தினை செய்வதற்கும் பகுப்பாய்வு 12 பசுந்தேயிலை பகுப்பாய்வு இயந்திரங்கள், ரூ.67.73 இலட்சத்திற்கு, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (SADP) கீழ் கொள்முதல் செய்து நிறுவப்படும்.

கடனுதவி முதல் புத்தாக்க சான்றிதழ் படிப்பு வரை... சிறு, குறு தொழில் துறையின் 35 அறிவிப்புகள் என்ன?

16. MSME நிறுவனங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்த தொடர் பரிமாற்றத் திட்டம் உருவாக்கப்படும்.

MSME நிறுவனங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்தும் வகையில் ஒரு தொடர் பரிமாற்றத் திட்டம் உருவாக்கப்படும். இதனால் இதனால் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையேயான இணைப்புகள் பலப்படுத்தப்படும். இதன் மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் பணி வாய்ப்பு பெற இயலும். இதற்காக ரூ.38 இலட்சம் செலவிடப்படும்.

17. சேகோசர்வ் உறுப்பினர்களுக்கு, நீர் சுத்திகரிப்பிற்கான எதிர் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) இயந்திரம் நிறுவுவதற்கு மானியம் வழங்கப்படும்.

ICAR-CTCRI-யின் நிலையான இயக்க செயல்முறை (SOP) வரைவில் தெரிவித்துள்ளபடி சேகோ உற்பத்தியின் போது நீர் சுத்திகரிப்பிற்கான எதிர் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) இயந்திரம் நிறுவுவதற்கு சேகோசர்வ் உறுப்பினர்களுக்கு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி செலவிடப்படும்.

18. தென்னைநார் தொழிற்சாலைகள் பரிசோதனை கூடத்தில், மேற்கொள்ளும் பரிசோதனை கட்டணத்திற்கு மானியம் வழங்கப்படும்.

பாதுகாப்பான, தரமான மற்றும் கரிம (Organic) தென்னைநார் பொருட்களை தயாரிப்பதனை ஊக்கப்படுத்தும் விதமாக ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தென்னைநார் தொழிற்சாலைகள், பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளும் பரிசோதனை கட்டண செலவில் 25% மானியமாக வழங்கப்படும். இதற்காக ரூ.11 இலட்சம் செலவிடப்படும்.

19. புதுக்கோட்டை மாவட்டம் வல்லவாரி ஆதி-திராவிடர் கயிறு தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்திற்கு, சேமிப்பு கிடங்கு அமைக்கவும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தான்கோட்டை கயிறு தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்திற்கு தானியங்கி கயிறு திரிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்து வழங்கவும் மொத்தம் ரூ.25.09 இலட்சம் செலவிடப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லவாரி ஆதி- திராவிடர் கயிறு தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்திற்கு, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன (TANCOIR) நிதியுதவியுடன் ரூ.14.49 இலட்சம் மதிப்பீட்டில் கயிறு மூலப்பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட தென்னைநார் பொருட்களை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். மேலும், புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தான்கோட்டை கயிறு தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்திற்கு தானியங்கி கயிறு திரிக்கும் இயந்திரங்கள் ரூ.10.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

20. நீலகிரி மாவட்டத்திலுள்ள தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும், நீலகிரி தேயிலைத்தூளினை விளம்பரப்படுத்தி விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் ரூ.10 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற் சாலைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக ரூ.10 இலட்சம் நிதியுதவி பெறப்பட்டு நீலகிரி மாவட்ட தேயிலைத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் நீலகிரி தேயிலைத்தூளினை சந்தையில் விளம்பரப்படுத்தி விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

21. சென்னை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் வேலூர் மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும். மேலும், மதுரை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மதுரை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும்.

சென்னை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் வேலூர் மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும். மேலும், மதுரை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மதுரை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும். இதன் மூலம் குறு, சிறு நிறுவனங்களின் மனுக்கள் விரைந்து தீர்வு காணப்பட்டு, நிலுவைத்தொகையும் துரிதமாக பெற்றுத்தரப்படும்.

22. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம், திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில் சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.50 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய குறுந்தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்த தொழிற் பகுதியான குன்றத்தூர் வட்டம், திருமுடிவாக்கத்தில் குறுந்தொழில் முனைவோர் களுக்காக 2.47 ஏக்கரில் ரூ.2.50 கோடி திட்ட மதிப்பில் புதிய குறுந்தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

23. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கொத்தயத்தில் 53.50 ஏக்கரில் சுமார் 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.16.58 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒட்டன்சத்திரம் வட்டம், கொத்தயத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்காக 53.50 ஏக்கரில் ரூ.16.58 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிற்சாலையினை அமைக்க உதவும். மேலும், சுமார் 2000 நபர்களுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

24. தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், சங்கராப்பேரியில் 23 ஏக்கரில் சுமார் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.6.51 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கயத்தார் வட்டம், சங்கராப்பேரியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உருவாக்க 23 ஏக்கரில் ரூ.6.51 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிற்சாலையினை அமைக்க உதவும். மேலும், சுமார் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

25. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மாங்குளத்தில் 10 ஏக்கரில் சுமார் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.70 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மானாமதுரை வட்டம், மாங்குளத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உருவாக்க 10 ஏக்கரில் ரூ.2.70 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிற்சாலையினை அமைக்க உதவும். மேலும், சுமார் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கடனுதவி முதல் புத்தாக்க சான்றிதழ் படிப்பு வரை... சிறு, குறு தொழில் துறையின் 35 அறிவிப்புகள் என்ன?

26. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தியாளர்களுக்காக ரூ.2.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 6600 சதுர அடியில் சேமிப்புக் கிடங்கு கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிட்கோ மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் செய்யப்பட்ட வகையில், அவர்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை சேமித்து வைக்கும் பொருட்டு ரூ.2.82 கோடி மதிப்பில் 6600 சதுர அடியில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும்.

27. விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சிட்கோ தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தியாளர்களுக்காக 4250 சதுர அடி பரப்பில் சேமிப்புக் கிடங்கு ரூ.1.83 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சிட்கோ தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிட்கோ மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை சேமித்து வைக்கும் பொருட்டு ரூ.1.83 கோடி மதிப்பில் 4250 சதுர அடி பரப்பில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும்.

28. சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் விரிவு படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் இந்நிதியாண்டில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் தொடங்கப்படும்.

29. கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

புத்தொழில் சூழமைவு மேம்பாட்டை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்கும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டன. சென்னையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய சென்னை பெருநகர புத்தொழில் மையம் (Chennai Metro Startup Hub) உருவாக்கப்பட்டது. இந்நிதியாண்டில் கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

30. புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு களுக்கான "தொழில் நயம்" என்ற நவீன வடிவமைப்பு உதவி மையம் StartupTN சென்னை மெட்ரோ மையத்தில் நிறுவப்படும்.

புத்தொழில் நிறுவனங்களின் நிறுவனங்களின் வடிவமைப்பு தேவையினை நிறைவு செய்வதற்காக, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை மையத்தில் நவீன தொழில்நுட்பத்தினை மையமாகக் கொண்ட "தொழில் நயம்" எனும் ஒரு நவீன வடிவமைப்பு உதவி மையம் தொடங்கப்படும்.

31. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்க்கான புத்தொழில் நிதி.

மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய புதுயுக தொழில் முனைவு வளர்ச்சியினை அடையும் நோக்கத்தில், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, சிறப்பு ஆதார மானியநிதி வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

32. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவின் இரண்டாம் பதிப்பு இந்த நிதி ஆண்டில் ஆண்டில் மதுரையில் நடத்தப்படும்.

புதுயுகத் தொழில் முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை சமூகத்தில் ஏற்படுத்த உதவும் வகையிலும், இளைய தலைமுறையினர் இடையே புத்தொழில் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாகவும், மேலும், புத்தொழில் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள் பெற்றுத்தரும் வகையிலும் மாபெரும் ஸ்டார்ட்அப் திருவிழா நிகழ்வின் இரண்டாம் பதிப்பு மதுரையில்நடத்தப்படும்.

33. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு "பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP) " ரூ.4.11 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.

"பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது (SIDP)"பரிசோதனை அடிப்படையில் கள்ளக்குறிச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களையும் சேர்த்து 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தியதன் அடிப்படையில், வரும் நிதியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் ரூ.4.11 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.

34. கண்டுபிடிப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமைகளை தாக்கல் செய்வதை ஆதரிக்க ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் "தமிழ்நாடு அறிவுசார் சொத்து சேவை மையம்(IPFC)" அமைக்கப்படும்.

மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் செய்வோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடையே அவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கீழ் "தமிழ்நாடு அறிவுசார் சொத்துரிமை சேவை மையம் (IPF C ) " உருவாக்கப்படும். இந்த மையத்தின் நோக்கமானது பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP) மற்றும் ஹேக்கத்தான் போட்டி வெற்றியாளர்களின் மற்றும் புத்தொழில் தொடங்குபவர்களின் கண்டுபிடிப்புகள் (காப்புரிமைகள்), பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், தொழில்துறை வடிவமைப்புகள் மற்றும் புவியியல் குறியீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாக்கும்.

35. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தினை அடுத்த நிலைக்கு உயர்த்திடும் பொருட்டு ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது 2024-ஆம் ஆண்டு முதல் 500 மாணவர்களை கொண்ட கல்வி கழகமாக உருவாக்கிடும் பொருட்டு, ஓராண்டு சான்றிதழ் படிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கு இளநிலை பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இது ஒரு சுயநிதி திட்டமாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories