தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், அமைச்சர்கள் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது துறைக்கான திட்டங்களை அறிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் திருக்கோயில்கள் அதிகம். காரணம், நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதம் இருந்தாலும் அன்பு கொள்வதே சொல்கிறது.
இந்து மதக் கடவுளை கோயிலில் வைத்து வணங்கலாம், பிரசாரத்திற்கு அழைத்து வராதீர்கள். இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். உலகிற்கே பொதுமறையும், பொது நீதியும் வழங்கிய அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்.
மனித நேயம் ஒருபோதும் இம்மண்ணை விட்டு அகலாது. அறநிலையத்துறையே இருக்காது என்றவர்களின் எந்த அதிகாரமும் இங்கு செல்லாது. நதிகள் முன்னே தான் செல்லும், பின் வந்ததில்லை. அதுபோல் எங்கள் முதல்வர் இலட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைத்ததில்லை; வைப்பதில்லை" என்றார்.