கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெத்தனால் அருந்தி பலரும் உயிரிழந்தனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.மெத்தனாலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்து வழங்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சுமார் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். இது தேவையற்ற ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் திமுக குறித்து அவதூறு கருத்துகளை பேசியிருக்கிறார்..எடப்பாடி பல்வேறு கருத்துகளை சொல்வதை நினைத்துக்கொண்டு உண்மைக்கு புறம்பான தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவர் ஏதோ உத்தமர் போல பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலை துறையில் டெண்டர்களை உறவினர்களுக்கு ஒதுக்கியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இந்த டெண்டர் முறைகேடு வழக்கில் நாங்கள் சிறப்பு புலனாய்வு விசாரணைதான் கோரினோம். ஆனால் அதில் பல சிக்கல்கள் இருந்ததால் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. அன்றைக்கும் இன்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை.
மேலும் கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியின்போது கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிப்பட்ட விவகாரத்தில் 8 ஆண்டுகளாகியும் சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுகுறித்து இதுவரை FIR-ம் பதிவு செய்யவில்லை.
நெடுஞ்சாலைத் துறையில் உறவினர்களுக்கு டென்டர் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை தான் தொடர்ந்து நடத்திட கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று வழக்கு தொடர உள்ளேன். அதிமுகவின் ஊழலை மறைத்து மக்களை திசை திருப்புவதற்காக ஏதேதோ எடப்பாடி பேசி வருகிறார்
சிபிஐ போனால் நேரம் ஆகும் காரணத்தினால் மட்டுமே, சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்தார் நம்முடைய முதலமைச்சர். வேறு எந்த காரணமும் கிடையாது. திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு அன்புமணி ராமதாஸ், எடப்பாடி போன்றவர்கள் இது போன்ற கணக்கெடுப்பு விவாகரத்தை பேசி வருகிறார்கள். ஆனால் இவையேதும் தேர்தலை பாதிக்காது.
கொடநாடு வழக்கில் விசாரணை சீராக சென்று கொண்டிருக்கிறது. எனவே 2021 சட்டபேரவை தேர்தல் பிராசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சொன்னதை போலவே நிச்சயமாக விரைவில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார். மக்கள் வரிப்பணத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கிருந்துகொண்டு, மாநில ஆட்சியை விமர்சிப்பது அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு அழகல்ல.
போதை பொருள் விவகாரத்தில் ஆளுநர் அரசியல்வாதி போல் பேசாமல், முதலில் பாஜவுடனான போதையில் இருந்து அவர் வெளிவர வேண்டும். எந்த விவகாரம் தொடர்பு இருந்தாலும் சட்டசபையில் நேருக்கு நேராக கேட்கும் தைரியம் எடப்பாடிக்கு கிடையாது. மறைமுகமாக பேசுவதே அவரது வேலை.
என்ன விவகாரம்? என்ன நடவடிக்கை? எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று முதலமைச்சரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து விவகாரத்திலும் முதலமைச்சர் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்." என்றார்.