கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் சிலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். தற்போது வரை சுமார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் துரிதம் காட்டி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
அதோடு இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், ரசாயனம் கலந்த சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து உயிரிழந்தோரின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ. வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.