முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் 'இலக்கை வென்றாடுவோம் கிழக்கை கொண்டாடுவோம்' எனும் தலைப்பில் கால்பந்து விளையாட்டு போட்டி துவக்க விழா சென்னை திரு.வி.க. நகர் மாநகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் துவங்கியுள்ளது. இதனை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா , மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராள்மானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வாசகத்துடன் முதலமைச்சர் பேசினார். ஆனால் சில இடங்களில் வேறு கட்சிகள் செல்வாக்காக உள்ளன என்றனர், கருத்து கணிப்புகள் எல்லாம் 30 வரை கிடைக்கும் என்ற கருத்தை எல்லாம் உடைத்து எரிந்தார். பாஜக வெற்றி பெறவும் இல்லை.
அடுத்த 2026-ம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகையால் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வெற்றி பெற பாடுபடுவோம்." என்றார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி மட்டுமல்லாமல் நாட்டை பாதுகாக்கும் கடமையும் நமக்கு உண்டு. இளைஞர்கள் போதை பொருட்களில் சிக்காமல் இருக்க அருமையான வழி தான் விளையாட்டாகும். பொறுப்பாக வேலை செய்யுங்கள் எஞ்சியிருக்கும் நேரத்தில் விளையாடுங்கள். உறுதியான தமிழ்நாட்டை உருவாக்க நல்ல இளைஞர்கள் தேவை" என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் புறக்கணிப்பு என்பது அவர்களின் இயலாமையை காட்டுகிறது.
எந்த ஒரு சூழலிலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். தேர்தல் ஆணையம் மாநில அரசு கட்டுபாட்டில் இல்லை, அது ஒன்றிய அரசு கட்டுபாட்டில் உள்ளது.
அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி ஒரு அப்பட்டமான காரணத்தை கூறுவது அவர்களின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது. பாஜக பாசிச கொள்கையை கொண்டவர்கள். பெண்களுக்கு சமத்துவம் வழங்குவதில் உடன்பாடு இல்லாதவர்கள். கொள்கை ரீதியாகவே பெண்கள் உரிமைகளுக்கு எதிரான இயக்கங்கள். பாஜக தற்போது அதனை மீண்டும் நிரூபித்து காட்டி உள்ளனர்.
பாஜகவினர் பெண்களுக்கு கற்று கொடுப்பது நீங்க பணிவாக, தாழ்வாக செல்ல வேண்டும் என்பதைத்தான். இதனைத்தான் நாம் பார்த்துக் கொண்டுள்ளோம் .அதனால் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மக்கள் காண முடிந்த ஒரு விஷயத்தை வெளியே கூற தைரியம் இல்லாமல் கூனி குறுகி சென்று ஒரு விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த ஒரு விளக்கம் எதிர்பார்த்த ஒன்றுதான். அவர்கள் இப்படித்தான் Train செய்யபட்டு உள்ளனர். ஆணாதிக்கம் சமூகம் உருவாக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம். விக்கிரவாண்டி தொகுதி திமுக தொகுதியாக இருந்தது; இப்போதும் அங்கு அமோக வெற்றி பெறுவார்கள். ஏற்கனவே விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம்" என்றார்.