உலகம் முழுவதும் ஜனநாயக தேர்தல் நடைமுறைக்கு பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக மோசடி செய்யும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்து வந்தது. தொடர்ந்து தற்போது பாஜக கூட்டணி வேட்பாளர் ஒருவர் EVM-ஐ ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி சார்பில் மும்பை வட மேற்கு தொகுதி வேட்பாளரான ரவீந்திர வாய்க்கர், வாக்குப்பதிவு இயந்திரத்தை போன் மூலம் OTP அனுப்பி ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் EVM-ஐ ஹேக் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் அவை hack செய்யப்படும் சாத்தியங்கள் அதிகம்!" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடு என சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் கென்னடி குற்றம்சாடிய பதிவை குறிப்பிட்டு மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக மூத்த வழக்கறிஞரும், எம்.பியுமான வில்சன் தனது சமூக வலைதள பக்கத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
"ஆம், எலான் மஸ்க் கூறியது உண்மைதான். இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. பல்வேறு நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மட்டும் அதனை தாங்கி பிடித்துள்ளது.
வாக்குச்சீட்டு முறையை ஒழித்த பிறகு, தொழிநுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வேலை நேரத்தை குறைக்கும் வகையிலும், தேர்தல் முடிவுகளை விரைவாக அறிவிக்கும் வகையிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகமானது.
ஆனால் இதனை ஹேக் செய்ய முடியும் என பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற குழு முன்னிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிவியல் ஆய்வு நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்து, அதன் மீது விவாதம் நடத்தி, நாட்டு மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான அச்சத்தை களைய வேண்டும்."